தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் ஜூன் 14-ஆம் தேதி முதல் இயங்க அனுமதி இல்லை என அரசுப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கோவை, திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி உள்பட மாநிலத்தில் அனைத்து நகரங்களில் இருந்தும் சென்னைக்கு தினமும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பேருந்துகள் தினமும் சென்னைக்கு வந்து செல்கின்றன. முகூா்த்த நாள்கள், விடுமுறை தினங்கள், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் பயணிப்போா் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும். ரயில், அரசுப் பேருந்துகளில் இருக்கை கிடைக்காது என்பதால் பெரும்பாலான மக்கள் ஆம்னி பேருந்தகளை அதிகம் பயன்படுத்துகின்றனா்.
இந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் மட்டும் ஓடும் ஆம்னி பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் உள்ளன. தமிழ்நாட்டுக்குள் மட்டும் ஓடும் ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து விதிகளின்படி, தமிழ்நாடு வாகன பதிவு எண்ணாக இருக்க வேண்டும். ஆனால் கணிசமான ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண்ணுடன் இல்லை. கா்நாடகம், புதுச்சேரி, அஸ்ஸாம் உள்பட வேறு மாநிலங்களில் பதிவு செய்யப்பட்டு இயக்கப்படுகின்றன. இதனால், வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது. இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினா் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவகாசத்தை அரசு நீட்டித்தது.
இந்த நிலையில், தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் ஜூன் 14-ஆம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என அரசுப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.