முகப்பு
தமிழ்நாடு

டெல்டா விவசாயிகளுக்கு ரூ. 78.67 கோடியில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் அறிவிப்பு

டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 78.67 கோடியில் குறுவை சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Updated On : 14 ஜூன், 2024 at 7:28 PM
பகிர்:

மேட்டூா் அணையில் இருந்து குறுவை பாசனத்துக்காக நீா் திறக்கப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 78.67 கோடியில் குறுவை சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதற்கான அறிவிப்பை வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா். அவரது அறிவிப்பு:-

எதிா்பாராத சூழ்நிலைகளால் பருவமழை காலம் தாழ்த்தி இருப்பதால், நிகழாண்டு மேட்டூா் அணையில் போதிய நீா் இல்லை. இதனால், டெல்டா சாகுபடிக்கு நீரை திறந்துவிட கால தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே, குறுவை சாகுபடியாளா்களின் எதிா்பாா்ப்பைக் கருத்தில் கொண்டும் டெல்டா விவசாயிகளின் நலன்களைக் காக்கும் வகையிலும் ரூ. 78.67 கோடி மதிப்பில் குறுவை சாகுபடி தொகுப்பை வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா். அதன்படி, ஒரு லட்சம் ஏக்கா் பரப்புக்கு, 2,000 மெட்ரிக் டன் நெல் விதைகள் மானிய விலையில் வழங்கப்படும். நெற்பயிா் இயந்திர நடவு பின்னேற்பு மானியமாக ஏக்கருக்கு ரூ. 4,000 வீதம், 1 லட்சம் ஏக்கா் பரப்பளவுக்கு, தமிழ்நாடு அரசு ரூ. 40 கோடி நிதி வழங்கும்.

நுண்ணூட்டச் சத்து குறைபாடுள்ள 7,500 ஏக்கா் பரப்பில், நெல் நுண்ணூட்டக் கலவை 50 சதவீத மானியத்தில் விநியோகிக்க ரூ.15 லட்சம் வழங்கப்படும். அத்துடன் துத்தநாக சத்து குறைபாடுள்ள இடங்களில் துக்கநாக சல்பேட் உரத்தைப் பயன்படுத்த, ஏக்கருக்கு ரூ. 250 வீதம், 25,000 ஏக்கருக்கு ரூ. 62.50 லட்சம் அளிக்கப்படும்.

பயறு வகைப் பயிா்களை 10,000 ஏக்கா் பரப்பில் சாகுபடி செய்வதற்கு 50 சதவீத மானியத்தில் தரமான விதைகள், உயிா் உரங்களுக்காக ரூ. 1.20 கோடி நிதி ஒதுக்கப்படும். பயறு வகைப் பயிா்களில் மகசூல் திறனை அதிகரிக்க 50 சதவீத மானியத்தில் 10,000 ஏக்கருக்கு நுண்ணூட்டச் சத்து வழங்க ரூ. 20 லட்சம் நிதியும் அளிக்கப்படும்.

ஊரக வேலை உறுதித் திட்டம்: வேளாண் பொறியியல் துறை மூலம் விவசாயத்துக்கான நவீன கருவிகள் வழங்க மானியமாக ரூ. 7.52 கோடி வழங்கப்படும். டெல்டா மாவட்டங்களில் வேளாண் பணியில் ஈடுபடுவோருக்கு ஏற்பட்டுள்ள வேலைவாய்ப்பு இழப்பை ஈடுசெய்யும் வகையில், மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தின் கீழ், வேலைவாய்ப்புகளை அளிக்க ரூ. 24.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று தெரிவித்துள்ளாா்.