முகப்பு
தமிழ்நாடு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: முதல் நாளில் 5 சுயேச்சைகள் வேட்புமனு

Updated On : 14 ஜூன், 2024 at 1:11 PM
பகிர்:

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் முதல் நாளில் மட்டும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கு நடைபெறும் இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. முதல் நாளில் 5 சுயேச்சை வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுவைத் தாக்கல் செய்தனர்.

விக்கிரவாண்டி தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த நா. புகழேந்தி உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து, இத்தொகுதிக்கான இடைத்தேர்தல் ஜூலை 10-ஆம் தேதி நடைபெறும் என்றும், இதற்கான வேட்புமனுதாக்கல் ஜூன் 14-ஆம் தேதி தொடங்கும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இதையடுத்து விக்கிரவாண்டி தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலராக மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலரான மு.சந்திரசேகர் தேர்தல் நடத்தும் அலுவலராகவும், விக்கிரவாண்டி வட்டாட்சியர் க.யுவராஜ் உதவித் தேர்தல் நடத்தும் அலுவலராகவும் நியமிக்கப்பட்டனர். மேலும் வேட்புமனு விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் பெறப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலுக்கான முறைப்படியான அறிவிக்கையை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் வெள்ளிக்கிழமை காலை வெளியிட்டார். இதைத் தொடர்ந்து மனுதாக்கல் முற்பகல் 11 மணிக்குத் தொடங்கியது.

கழுத்தில் ரூபாய் நோட்டுகளுடன்: முதல் நபராக தருமபுரி மாவட்டம், பெண்ணாகரம் வட்டம், நாகமரை புதூர் பிரதான சாலையைச் சேர்ந்த நல்லப்பன் மகனும், அகில இந்திய ஊழல்தடுப்பு கூட்டமைப்பைச் சேர்ந்தவருமான அக்னிஆழ்வார் (43 ரூபாய் நோட்டுகளை கழுத்தில் மாலையாக அணிந்து கொண்டு விக்கிரவாண்டி வட்டாட்சியரகம் வந்து, தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுலவரான சந்திரசேகரிடம் வழங்கினார். ரூ.50 ஆயிரம் மதிப்பிலான ரூபாய் நோட்டுகளை மாலையாக அணிந்து வந்த அக்னி ஆழ்வார், தனது வேட்பு மனுவுக்கான வைப்புத் தொகையான ரூ.10 ஆயிரத்தை சில்லறை நாணயங்களாக வழங்கினார். இந்த நாணயங்களை 10 பேர் கொண்ட அரசு ஊழியர்கள் அரை மணி நேரமாக எண்ணி முடித்து, சரிபார்த்த பின்னர், அவரது மனுவைத் தேர்தல் அலுவலர் பெற்றுக் கொண்டார்.

வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதை தடுக்காமல் தேர்தல் ஆணையமும், அலுவலர்களும் சில்லறைத்தனமாக நடந்து கொள்கிறார்கள். 51-ஆவது முறையாக தேர்தலில் போட்டியிடும் நான், இத்தொகுதியில் மனுதாக்கல் செய்துள்ளேன் என்றார் அக்னி ஆழ்வார்.

தேர்தல் மன்னன் மனுதாக்கல்: தேர்தல் மன்னன் என்றழைக்கப்படும் சேலம் மாவட்டம், மேட்டூர் ராமன் நகரைச் சேர்ந்த குஞ்சம்புநாயர் மகன் பத்மராஜன்(63), தேர்தலில் போட்டியிடுகிறார். இதைத் தொடர்ந்து அவர் தேர்தல் நடத்தும் அலுவலரான சந்திரசேகனிடம் மனுதாக்கல் செய்தார். இதுவரை மக்களவை, மாநிலங்களவைத் தேர்தல், குடியரசுத் தலைவர், சட்டப்பேரவைத் தேர்தல் என பல்வேறு தேர்தல்களில் போட்டியிடும் வகையில் 241 முறை மனுதாக்கல் செய்துள்ளேன். தற்போது விக்கிரவாண்டி தொகுதியிலும் போட்டியிடும் வகையில் 242 ஆவது முறையாக எனது மனுவைத் தாக்கல் செய்திருக்கிறேன்.

இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றதில்லை. தோல்வி அடைவதுதான் எனக்கு மகிழ்ச்சி. கின்னஸ் சாதனை படைக்கவே இதுபோன்று அனைத்துத் தேர்தல்களிலும் போட்டியிட்டு வருகிறேன் என்றார் அவர்.

எண்ம அட்டைகளை மாலையாக அணிந்து: திருச்சி உறையூர் பணிக்கன்தெருவைச் சேர்ந்த சீனிவாசன் மகன் எஸ்.ராஜேந்திரன்(63) ஏடிஎம் அட்டை உள்ளிட்ட எண்ம அட்டைகளை மாலையாக வந்து, தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வழங்கினார். மேலும் தனது வேட்புமனுவுக்கான வைப்புத் தொகையான ரூ.10 ஆயிரத்தை வங்கிப் பற்று அட்டை மூலம் எடுத்துக் கொள்ளுமாறு கூறினார். இதற்குத் தேர்தல் நடத்தும் அலுவலர் மறுப்புத் தெரிவித்ததால், வைப்புத் தொகையை செலுத்தாமல் மனுவை மட்டும் வழங்கிவிட்டுச் சென்றார் ராஜேந்திரன்.

நாடு முழுதும் எண்மமயமாகிவிட்டதாக பிரசாரம் செய்யும் மத்திய அரசு, அதை முழுமையாக அமல்படுத்தவில்லை. மத்திய அரசும், தேர்தல் ஆணையமும் முறையாக எண்ம முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி நான் எனது வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளேன் என்றார் ராஜேந்திரன்.

44-ஆவது முறையாக மனுதாக்கல்: கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை சாலை, சுந்தாரபுரம் அஷ்டலட்சுமி நகரைச் சேர்ந்த அப்துல் மஜீத் மகன் நூர்முகமது(38) தேர்தலில் போட்டியிடும் வகையில் தனது வேட்புமனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகரிடம் மனுவைத் தாக்கல் செய்தார். இத்தேர்தலுடன் சேர்த்து இதுவரை 44 முறையாக தேர்தலில் போட்டியிட மனுதாக்கல் செய்து உள்ளதாக நூர்முகமது தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து அகிம்சா சோசியலிஸ்ட் கட்சியின் நிறுவனர் ரமேஷ் 5-ஆவது நபராக தனது வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார். முதல் நாளில் மட்டும் 5 சுயேச்சை வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்துள்ளனர்.

முழு கட்டுரையைப் படிக்க →