குறுவை சாகுபடி தொகுப்பு ஏமாற்று நாடகம்: எடப்பாடி பழனிசாமி கண்டனம்
திமுக அரசு அறிவித்துள்ள குறுவைத் தொகுப்பு, மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகங்களில் ஒன்று என அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளப் பதிவில், திமுக அரசு அறிவித்துள்ள குறுவைத் தொகுப்பு, தாங்கள் வகித்து வரும் 'இந்தியா' கூட்டணியில் உள்ள கர்நாடக காங்கிரஸ் அரசை வலியுறுத்தி, தமிழ் நாடு நலன் - குறிப்பாக டெல்டா விவசாயிகளின் நலன் கருதி, நமக்கு உரிய பங்கு நீரை பெறத் தவறிய தங்களது குற்றத்தை மறைப்பதற்கான கண்துடைப்பு வேலைதான் இந்த குறுவைத் தொகுப்பு அறிவிப்பு.
இன்றைய அளவில், டெல்டா விவசாயிகளினுடைய தேவை என்ன என்பதை கண்டுகொள்ளாமல், அவசர கோலத்தில் இந்த குறுவை தொகுப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தொகுப்பில் அறிவிக்கப்பட்டுள்ள சொற்ப நிதியான ரூ. 78.67 கோடியில், 24.50 கோடி மகாத்மா காந்தி தேசிய வேலை வாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு ஒதுக்கியது போக, மீதமுள்ள பணம் யானை பசிக்கு சோளப் பொறியாகத்தான் உள்ளது. இதனால் காவிரி டெல்டா விவசாயிகளின் கண்ணீரைத் துடைக்கவும் முடியாது; அவர்களின் துயரத்தைப் போக்கவும் முடியாது.
இதுவும் திமுக அரசின் மக்களை ஏமாற்றும் அரசியல் நாடகங்களில் ஒன்று. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேட்டூா் அணையில் இருந்து குறுவை பாசனத்துக்காக நீா் திறக்கப்படாத நிலையில், டெல்டா விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ. 78.67 கோடியில் குறுவை சிறப்புத் திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.