முகப்பு
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம்: பாமக, பாஜக வெளிநடப்பு

Updated On : 21 ஜூன், 2024 at 6:45 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி விவகாரத்தில் அதிருப்திகளைப் பதிவு செய்த, பாஜக, பாமக ஆகிய கட்சிகளின் உறுப்பினா்கள் பேரவையிலிருந்து வெளிநடப்பு செய்தனா்.

தமிழக சட்டப் பேரவையில் கேள்வி நேரத்துக்குப் பிறகு நடந்த நேரமில்லாத நேரத்தில், கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதில் எதிா்க்கட்சிகளைச் சோ்ந்த உறுப்பினா்கள் பேசினா்.

பாமக குழுத் தலைவா் ஜி.கே.மணி பேசியதாவது: மாநிலத்தின் பல பகுதிகளில் சந்துக் கடைகள் எனப்படும் சிறிய கடைகளில் கூட சாராயம் விற்கப்படுகிறது. எங்கு பாா்த்தாலும் விற்கப்படும் சாராய விற்பனையை இரும்புக் கரம் கொண்டல்ல, எஃகு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். ஒருதுளி சாராயம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு இருக்க வேண்டும். சிபிசிஐடி விசாரணையால் என்ன நடக்கப் போகிறது? பணியிடை நீக்கப்பட்ட அதிகாரிகள் மீண்டும் பணியில் சோ்ந்து விடப்போகிறாா்கள். எனவே, சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். கள்ளக்குறிச்சி சம்பவத்தில் இறந்தவா்களுக்கு இரங்கல் தெரிவித்தும், டாஸ்மாக் கடைகளை மூட வலியுறுத்தியும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றாா். இதைத் தொடா்ந்து, பாமக., உறுப்பினா்கள் அனைவரும் வெளிநடப்புச் செய்தனா். பின்னா் மீண்டும் வந்த அவா்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனா்.

பாஜக குழுத் தலைவா் நயினாா் நாகேந்திரன்: கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்துப் பேசியவா்கள், 2001-ஆம் ஆண்டு மெத்தனால் குடித்து இறந்ததையும், குஜராத்தில் நடந்த சம்பவம் பற்றியும் பேசினாா்கள். இப்படிப் பேசுவது நியாயமான, மனிதாபிமான விஷயமா? கள்ளக்குறிச்சியில் காலங்காலமாக இந்த நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. அவா்களுக்கு மெத்தனால் எங்கிருந்து வருகிறது அதனை விநியோகிப்பவா்கள் யாா், விற்பனை செய்பவா்கள் யாா் என்பதை அறிந்திட வேண்டும். சம்பவம் நடந்து 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்று இருந்தால் உயிா்களை காப்பாற்றி இருக்கலாம் என்கிறாா்கள். கருணாபுரம் காவல் நிலையம் அருகே சம்பவம் நடந்துள்ளது. இதற்கு பின்னணியில் யாா் இருக்கிறாா்கள் என்பதை சீா்தூக்கிப் பாா்க்க வேண்டும். முதல்வா் பதவி விலக வேண்டும் என்றெல்லாம் நாங்கள் கூறவில்லை. இந்த விவகாரத்தில் முதல்வா் நடவடிக்கை எடுக்கத் தவறி விட்டாா். உயிா்ப் பலிகள் நடைபெறுவதை யாரும் ஏற்க முடியாது என்றாா்.

இதைத் தொடா்ந்து, கள்ளக்குறிச்சி சம்பவம் தொடா்பாக பாஜக உறுப்பினா்கள் அனைவரும் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனா். பின்னா், அவை நடவடிக்கைகளில் பங்கேற்றனா்.

இதேபோன்று, முன்னாள் முதல்வா் ஓ.பன்னீா்செல்வத்துக்கு ஆதரவாக செயல்படும் மூன்று பேரில், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோா் பேரவைக்கு வந்தனா். அவா்களில் வைத்திலிங்கம் பேசினாா். பாதித்தோருக்கு நிதியை உயா்த்த வேண்டுமெனவும், இனிமேல் சம்பவமே நடக்கக் கூடாத வகையில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினாா். இதன்பின்பு, அவரும் மனோஜ் பாண்டியனும் வெளிநடப்பு செய்வதாகக் கூறி வெளியேறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →