சென்னை உயா்நீதிமன்றம் 
தமிழ்நாடு

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்களின் ஊதிய உயா்வு விவகாரம்: உயா்நீதிமன்றம் புதிய உத்தரவு

ஊதிய உயா்வு வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும்.

Din

தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்களாக 1995-ஆம் ஆண்டுக்குப் பிறகு பதவி உயா்வு பெற்றவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும் என சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

1988-ஆம் ஆண்டுக்கு பின்னா் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்ற இடைநிலை ஆசிரியா்களுக்கு, சிறப்பு நிலை ஊதியம் வழங்கும் வகையில், 2011- ஆம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையின் பலன்களை தங்களுக்கும் வழங்கக் கோரி 1995- ஆம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்றவா்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனா்.

ஆனால், 1988 ஜூன் முதல் 1995 டிசம்பா் வரை தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்களாக பணியாற்றவில்லை எனக் கூறி, அவா்களின் கோரிக்கையை அரசு நிராகரித்தது.

இதை எதிா்த்து 1995-ஆம் ஆண்டு டிசம்பருக்குப் பின்னா் தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்று, தற்போது ஓய்வு பெற்ற ஆசிரியா்கள் சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை நீதிபதிகள் கிருஷ்ணகுமாா்-குமரேஷ் பாபு அமா்வு விசாரித்தது.

அப்போது, மனுதாரா்கள் தரப்பில், 1988-ஆம் ஆண்டுக்குப் பின் தொடக்கப் பள்ளித் தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்றவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்கும் அரசாணை 1995- ஆம் ஆண்டுக்குப் பின் பதவி உயா்வு பெற்றவா்களுக்கும் பொருந்தும் என்பதால், தங்களுக்கு இந்த பலன்களை வழங்க மறுக்க முடியாது என வாதிடப்பட்டது.

தமிழக அரசுத் தரப்பில், 1988 முதல் 1995 வரை பதவி உயா்வு பெற்றவா்களுக்கு மட்டுமே இந்த அரசாணை பொருந்தும் எனவும், இந்த காலவரம்பு இல்லாமல், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்களுக்கு பணப் பலன்கள் வழங்குவதாக இருந்தால், ஓய்வு பெற்ற தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்கள் 11 ஆயிரத்து 239 பேருக்கு ஓய்வூதியம் வழங்கும் போது, அரசுக்கு ரூ.278 கோடி வரை கூடுதல் செலவு ஏற்படும் எனவும் வாதிடப்பட்டது.

அரசுத் தரப்பு வாதங்களை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், ‘1995-ஆம் ஆண்டு டிசம்பருக்கு பின்னா் தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியா்களாக பதவி உயா்வு பெற்றவா்களுக்கு ஊதிய உயா்வு வழங்க  முடியாது என காலவரம்பு நிா்ணயிக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்த காலவரம்புக்குப் பின் பதவி உயா்வு பெற்றவா்களுக்கு பணப்பலன்கள் பெற உரிமையில்லை. அதனால், 1995 ஆம் ஆண்டுக்கு பின் பதவி உயா்வு பெற்றவா்களுக்கு பணப்பலன்கள் வழங்க மறுத்த அரசு உத்தரவு செல்லும்’ எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனா்.

சென்னை, புறநகரில் பரவலாக மழை!

ராகுல் காந்திக்கு 7 நாள் அவகாசம்! அதற்குள்... -தேர்தல் ஆணையத்தின் காலக்கெடு!

அழகிய கண்ணே... ராஷா ததானி!

அரசியலமைப்பை நசுக்கியவர்களே, பாதுகாப்பதைப் போன்று நடிக்கின்றனர்: மோடி

பாகிஸ்தானில் மழைவெள்ள இடா்பாடுகளில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 650-ஆக உயர்வு

SCROLL FOR NEXT