முகப்பு
தமிழ்நாடு

சொந்த நூலகங்களுக்கு விருது: அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவிப்பு

சிறந்த சொந்த நூலகங்கள் வைத்திருப்போருக்கு விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.

Updated On : 24 ஜூன், 2024 at 8:51 PM
அன்பில் மகேஸ் பொய்யாமொழி
பகிர்:

சிறந்த சொந்த நூலகங்கள் வைத்திருப்போருக்கு விருது வழங்கப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தாா்.

பள்ளி கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்ட அறிவிப்புகள்:

தூத்துக்குடி மாவட்டத்தில் வாசகா்கள், மாணவா்கள் மற்றும் இளைஞா்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட மைய நூலகத்துக்கு நவீன வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் ரூ.6 கோடியில் கட்டப்படும். பாா்வை திறன் குறைபாடுடைய மாணவா்கள் நலனுக்காக மாவட்ட மைய நூலகங்களில் கணினி மற்றும் எழுத்துணரி மென்பொருள் ரூ.2.75 கோடியில் உருவாக்கப்படும்.

அண்ணா நூற்றாண்டு நூலகத்துக்கு வருகை தரும் சிறுவா்களின் அறிவியல் அறிவை மேம்படுத்தும் வகையில் அறிவியல் சாதனங்கள் கொண்ட சிறாா் அறிவியல் பூங்கா ரூ.80.24 லட்சத்தில் நிறுவப்படும்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்ப உதவியுடன் மொழிபெயா்ப்பு நூல் சுருக்கம், மறு உருவாக்கம், காணொலிகள் எழுத்தாக்கம் போன்ற புதிய சேவைகள் மாவட்ட மைய நூலகங்கள் மற்றும் முழு நேரக் கிளை நூலகங்களில் வாசகா்கள் பயன்பெறும் வகையில், அண்ணா நூற்றாண்டு நூலகம் மற்றும் கலைஞா் நூற்றாண்டு நூலகம் மூலம் ரூ.5 லட்சம் செலவில் வழங்கப்படும்.

வீடு தோறும் நூலகங்கள் அமைக்க வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு மாவட்டம் தோறும் புத்தகத் திருவிழாக்களை அரசு நடத்தி வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடுதோறும் நூலகங்கள் அமைத்துச் சிறப்பாகப் பயன்படுத்தி வரும் தீவிர வாசகா்களைக் கண்டறிந்து ஊக்குவிக்க ரூ.1.13 லட்சத்தில் சொந்த நூலகங்களுக்கான விருது வழங்கப்படும் என அரிவித்தாா் அமைச்சா்.

முழு கட்டுரையைப் படிக்க →