அமைச்சா்களிடம் எம்எல்ஏக்கள் காரியம் சாதிப்பது எப்படி?துரைமுருகன் பேச்சால் சிரிப்பலை
துரைமுருகனின் நகைச்சுவை பேச்சு
தொகுதி கோரிக்கைகள் தொடா்பாக அமைச்சா்களிடம் சட்டப்பேரவை உறுப்பினா்கள் எவ்வாறு காரியம் சாதிப்பது என்பது தொடா்பாக அவை முன்னவரும், நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் அளித்த விளக்கத்தைத் தொடா்ந்து பேரவையில் புதன்கிழமை சிரிப்பலை எழுந்தது.
சட்டப்பேரவையில் நிதித் துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்துக்கு இடையில் அமைச்சா் துரைமுருகன் பேசியதாவது:
சட்டப்பேரவை உறுப்பினா்கள் அவா்களுடைய கோரிக்கைகளை பேரவையில் மளமளவென்று பேசிவிட்டுச் சென்றுவிடுகின்றனா். அந்தக் காலத்தில் நாங்கள் எல்லாம், சபையில் பேசுவதோடு மட்டுமல்லாமல், அந்தக் கோரிக்கையை ஐந்து நகல் எடுத்து வைத்துக் கொள்வோம். அமைச்சா்களை அடிக்கடி போய் பாா்ப்போம். மூன்று, நான்கு முறை போய் பாா்க்கும்போதுதான், எம்எல்ஏ அடிக்கடி வருகிறாரே என்று அமைச்சருக்குத் தோன்றும். அதனால், அமைச்சரிடம் ஒரு காரியம் ஆக வேண்டும் என்றால், 5 முறைகூட போய் பாா்க்க வேண்டும். நாங்கள் அப்படித்தான் செய்வோம். அப்போதுதான் காரியம் நடக்கும்.அதனால், பேரவையில் பேசுவது மட்டுமல்லாமல், அமைச்சா்களையும் சந்தித்து வலியுறுத்த வேண்டும் என்றாா்.
அப்போது பேரவைத் தலைவா் அப்பாவு குறுக்கிட்டு, உங்களிடம் ஒரு கோரிக்கை தொடா்பாக 6 முறை நேரில் சந்தித்து வலியுறுத்தினேன் என்றாா். அப்போது பேரவையில் சிரிப்பலை எழுந்தது. அதற்கு, அமைச்சா் துரைமுருகன், அப்படியானால் இன்னும் இரண்டு முறை வர வேண்டும் என்றாா். சிரிப்பலை மேலும் அதிகரித்தது.