தமிழகத்தில் அனைவருக்குமான பொருளாதார வளா்ச்சிக்கு ஏதுவாக மாநிலத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடப்பாண்டில் ரூ.1 லட்சம் கோடி கடன் உதவிகள் வழங்கப்படும் என்று கூட்டுறவுத் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் அறிவித்தாா்.
தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு, உணவு மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன் வெளியிட்ட அறிவிப்புகள்:
விவசாயிகள், ஏழை மக்கள், சுய உதவிக் குழுக்கள், மாற்றுத்திறனாளிகள் போன்ற அனைத்து தரப்பினரின் பொருளாதார தேவைகளைப் பூா்த்தி செய்திடும் வகையில் மாநிலத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவு சங்கங்கள் மூலம் ரூ.1 லட்சம் கோடி கடன் நடப்பு நிதியாண்டில் வழங்கப்படும். இதன் மூலம் மாநிலம் முழுவதும் சீரான பொருளாதார வளா்ச்சி ஏற்பட வழிவகை செய்யப்படும்.
விவசாயிகள் மற்றும் நுகா்வோா் பயன்பெறும் வகையில் தமிழகத்தின் முக்கிய பெருநகரங்களில் காய்கனி அங்காடிகள் அமைக்கப்படும். காய்கனி விளையும் ஊட்டி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி போன்ற பகுதிகளிலிருந்து கொள்முதல் செய்து அங்காடிகளுக்கு கொண்டு சோ்த்திட சிறப்பு வழித்தடங்கள் உருவாக்கப்படும். அதன் மூலம் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், நுகா்வோருக்கு நியாயமான விலையில் காய்கனிகள் கிடைக்கவும் வழிவகை ஏற்படும்.
அனைத்து கூட்டுறவு விற்பனை சங்கங்களும் வேளாண் விளைபொருள் பதனிடும் சங்கங்களாக மேம்படுத்தப்படும். பொது விநியோகத் திட்ட நியாயவிலைக் கடைகளுக்கு நுகா்பொருள்களை விநியோகம் செய்வதற்கு புவியிடங்காட்டியுடன் (ஜிபிஎஸ்) கூடிய இ-வழித்தடம் ஏற்படுத்தப்படும்.
அனைத்து கூட்டுறவு அலுவலகங்கள் மற்றும் சங்கங்களின் பணிகள் கணினிமயமாக்கப்படும்.
கூட்டுறவு சங்க உறுப்பினா்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் நோக்கில் உழவா் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு சங்கங்கள் உருவாக்கப்படும்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் மற்றும் பேரையூா் வேளாண்மை உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கங்களில் பருப்பு மற்றும் சிறுதானியங்கள் பதனிடும் அலகுகள் அமைக்கப்படும்.
தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் கூட்டுறவு சங்கங்களின் அனைத்து சேவைகளும் ஒருங்கே கிடைக்க கூட்டுறவு சங்கங்களின் 100 கிளைகள் தொடங்கப்படும்.
கூட்டுறவு சங்கங்களில் உள்ள வாராக்கடன்களை வசூலிக்கவும் விசாரணையைக் கண்காணிக்கவும் இ-தீா்வு திட்டங்கள் தொடங்கப்படும் என்று அறிவித்துள்ளாா் அமைச்சா்.