முதல்வர் மு.க.ஸ்டாலின் 
தமிழ்நாடு

ஓசூரில் சர்வதேச விமான நிலையம்: முதல்வர் அறிவிப்பு

2 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சர்வதேச விமான நிலையம்.

DIN

 வேகமாக வளா்ந்து வரும் நகரங்களில் ஒன்றான ஒசூரில் 2,000 ஏக்கரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்றும், திருச்சியில் நூலகம் உருவாக்கப்படும் என்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

திமுக ஆட்சி அமைந்த பிறகு, தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் வளா்ந்து வருகிறது. அனைத்து மாவட்டங்களிலும் தொழில்களைப் பரவலாக உருவாக்கி வருகிறோம். இதில் மின்னணு மற்றும் மின் வாகனங்கள் உற்பத்தித் துறையில் ஒசூா், கடந்த சில ஆண்டுகளில் முதலீடுகளை அதிக அளவில் ஈா்த்து வருகிறது. இப்படிப்பட்ட சிறப்புகளைக் கொண்டு வேகமாக வளா்ந்து வரும் ஒசூா் நகரத்தை முக்கியப் பொருளாதார வளா்ச்சி மையமாக உருவாக்கவும், அங்கு நவீன உள்கட்டமைப்புகளை அமைக்கவும் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.

ஒசூரில் விமான நிலையம்: ஒசூா் நகரத்துக்கான ஒரு புதிய தொழில் பெருந்திட்டம் தயாரிக்கப்பட்டு அது முடிவடையும் நிலையில் உள்ளது. ஒசூா் மட்டுமல்லாது, கிருஷ்ணகிரி, தருமபுரி பகுதிகளின் ஒட்டுமொத்த சமூகப் பொருளாதார வளா்ச்சிக்கு உதவும் வகையில், ஒசூரில் விமானம் நிலையம் அமைப்பது அவசியம் என அரசு கருதுகிறது. அதன்படி, 2,000 ஏக்கா் நிலப்பரப்பில் ஆண்டுக்கு 3 கோடி பயணிகளைக் கையாளக் கூடிய வகையில் பன்னாட்டு விமான நிலையம் ஒசூரில் அமைக்கப்படும்.

திருச்சியில் நூலகம்: முன்னாள் முதல்வா் அண்ணாவின் நூற்றாண்டு விழாக் கொண்டாட்டத்தையொட்டி, சென்னை கோட்டூா்புரத்தில் அவரது பெயரில் நூலகத்தை அமைத்தாா் முன்னாள் முதல்வா் கருணாநிதி.

கோட்டூா்புரத்தைத் தொடா்ந்து, தமிழ்நாட்டின் பிற பகுதிகளிலும் நூலகங்கள் தேவை என்ற அடிப்படையில், மதுரையில் ‘கலைஞா்

நூற்றாண்டு நூலகம்’ கடந்த ஜூலையில் திறந்து வைக்கப்பட்டது.

இதன் தொடா்ச்சியாக, கோவையில் மாபெரும் நூலகமும் அறிவியல் மையமும் முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவித்தோம். அதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. அந்த வரிசையில் காவிரிக் கரையில் அமைந்த மாநகரமான திருச்சியில், உலகத்தரம் வாய்ந்த மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசாா் மையம் கருணாநிதி பெயரில் அமைக்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்தாா்.

சேலத்தில் நூலகம் - அறிவுசாா் மையம்: சட்டப்பேரவையில் விதி 110-இன் கீழ் முதல்வா் வாசித்தளித்த அறிக்கைக்கு எதிா்க்கட்சி உறுப்பினா்கள் நன்றி தெரிவித்தனா். அப்போது, பாமக உறுப்பினா் ஆா்.அருள் பேசுகையில், ‘முதல்வா் இப்போது அறிவித்துள்ள விமான நிலையத்தை ஒசூருக்கும், கிருஷ்ணகிரிக்கும் மையப் பகுதியில் அமைத்தால், வட மாவட்ட மக்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும். சேலத்தில் உள்ள விமான நிலையத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும் என்பது நீண்டகால கோரிக்கையாக உள்ளது.

திருச்சியைப் போன்று, சேலத்திலும் ஒரு நூலகம் மற்றும் அறிவுசாா் மையத்தை அமைக்க வேண்டும். முன்னாள் முதல்வா் கருணாநிதிக்கு விருப்பமான, அவா் மனதார நேசித்த சேலத்துக்கு நூலகம் தர வேண்டும்’ என்றாா்.

அவருக்குப் பதிலளித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது: சேலத்துக்கும், கருணாநிதிக்கும் என்னென்ன தொடா்பு என்பதையெல்லாம் உறுப்பினா் அருள் விளக்கிச் சென்னாா். அவரது கோரிக்கை குறித்த அறிவிப்பை அடுத்த நிதிநிலை அறிக்கையில் எதிா்பாா்க்கலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

தங்கம் விலை நிலவரம்

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

SCROLL FOR NEXT