சென்னை: மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருவதால், மாம்பலம் கால்வாய் குறுக்கே தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால், ஓரிரு நாள்கள் சென்னையில் மழை பெய்தாலும், அப்பகுதியில் உள்ள அரசு அலுவலகங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
எனவே, அரசு அலுவலக அதிகாரிகள், இப்பகுதியில் விரைவாக மெட்ரோ ரயில் பணிகளை முடித்துவிட்டு, பருவமழைக் காலம் தொடங்கும்போது, வழக்கம் போல கால்வாய் பாய்ந்தோட வழிசெய்துவிட்டு, பிறகு ஜனவரி மாதத்துக்குப் பிறகு இப்பகுதியில் மெட்ரோ ரயில் பணிகளைத் தொடங்க வேண்டும் என்று வலியுறுத்தியிருக்கிறார்கள்.
தி.நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கழிவுநீர் மற்றும் மழை நீரை கொண்டு சென்று அடையாற்றில் விடுவதற்கான ஒரே வாய்ப்பாக ஐந்து கிலோ மீட்டர் தொலைவுக்குப் பாயும் மாம்பலம் கால்வாய் அமைந்துள்ளது. ஆனால், மெட்ரோ பணிகளுக்காக, இந்த கால்வாய் வெங்கடநாராயணா சாலை அருகே தடுக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையின்போதே, அங்கு தேங்கிய மழை நீர் மோட்டார் பம்புகள் மூலம் வெளியற்றப்பட்டு கால்வாயில் விடப்பட்டது.
லேசான மழை என்பதால், இதனை எளிதாகக் கையாண்டுவிடலாம், ஆனால், அடுத்த மாதத்துக்குள் மெட்ரோ பணிகள் முடித்துக்கொள்ளப்பட வேண்டும், ஜனவரிக்குப் பிறகுதான் தொடங்க வேண்டும், இப்போது கைவசம் உள்ள மோட்டார் பம்புகள் பெரிய அளவில் தண்ணீரை வெளியேற்றும் திறன்பெற்றது இல்லை என்கிறார்கள் அரசு அலுவலகத்தில் உள்ளவர்கள்.
பூமிக்கடியில் நந்தனம் மெட்ரோ ரயில் நிலையம் அமைக்கவே இந்த கால்வாய் மூடப்பட்டுள்ளது. எனவே, மெட்ரோ ரயில் நிலைய நிர்வாகம் அனுமதி வழங்கினால் மட்டுமே இந்தக் கால்வாய் திறக்கப்படும் என்று கூறப்படுகிறது.
ஆனால், அவசியம் ஏற்பட்டால், மழைநீர், கால்வாய்க்குள் செல்வதற்கான பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை எப்படி இருக்கும் என்று தெரியவில்லை என்கிறார்கள் அதிகாரிகள்.
பருவமழை தொடங்கும் முன்பே, கால்வாய் குறுக்கே போடப்பட்டிருக்கும் மண் அகற்றப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில்நிலைய அதிகாரிகள் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.