நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில், தமிழகத்தில் செய்கூலி, சேதாரமின்றி, நாற்பதுக்கு நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற்றுத் தந்த மக்களுக்கு தலைவணங்கி நன்றி தெரிவித்துக் கொள்வதாக முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழ்நாடு சட்டப் பேரவையில், காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைகள் தொடர்பான மானியக் கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரையில், நாற்பதுக்கு நாற்பது என்ற வெற்றியைப் பெற்ற பெருமிதத்துடன் இந்தப் பேரவைக்கு நாங்கள் வந்துள்ளோம். செய்கூலி சேதாரம் இல்லாமல் முழுமையான வெற்றியை வழங்கினார்கள். ஆளும் திராவிட முன்னேற்றக் கட்சி அரசின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையையே இந்த தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் நின்று, வாக்களித்த தமிழ்நாட்டு மக்களுக்கு வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
தொடர்ந்து அவர் பேசுகையில், மக்களவைத் தேர்தல் முடிவுகளை அலசி ஆராய்ந்தால் 221 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெறுவோம் என்று மமதையில் கூறவில்லை. மக்களவைத் தேர்தலில் வெற்றியை தந்த மக்களுக்கு தலைவணங்கி நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கள்ளக்குறிச்சி விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தேவையான அனைத்து நடவடிக்கைகளும் 24 மணி நேரத்தில் எடுக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையம் அமைத்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் நடவடிக்கைகள் போதவில்லை என்று கூறுவது தோல்வியை மறைக்கும் செயல். இந்த வழக்கில் நாங்கள் எதை மறைத்தோம், சிபிஐ விசாரணை கோருவதற்கு என்றும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும், தமிழகத்தில் குற்றங்களைத் தடுக்க தண்டனைகள் கடுமையாக்கப்படும். சட்டப்பேரவைத் தேர்தலின்போது திமுக அளித்த 190 ஆறிவிப்புகளில் கடந்த 3 ஆண்டுகளில் 179 திட்டங்களை நிறைவேற்றியிருக்கிறோம்.
காவலர்கள் விடுப்புக்கு விண்ணப்பம் செய்ய செயலி அறிமுகம் செய்துள்ளோம். கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் 8 பேரின் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதுவரை இந்த வழக்கில் 268 சாட்சியங்களிடம் விசாரணை நடைபெற்றுள்ளது. மேலும் சிலருக்குத் தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரிக்க இன்டர்போல் உதவியை நாடியுள்ளோம். பொதுமக்கள் அதிகம் கூடும் அனைத்து திருவிழாக்களும் அமைதியாக நடந்து முடிந்துள்ளது என்று ஸ்டாலின் பேரவையில் அறிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.