மதுரை: உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பேற்ற பிறகு, இதுவரை 64,798 முக்கிய வழக்குகளுக்கு தீர்ப்பளித்துள்ளதாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் தெரிவித்தார்.
நீதிபதியாக தனது செயல்பாடு குறித்த அறிக்கையை வழக்குரைஞர்கள் சங்க உறுப்பினர்களுக்கு கடிதம் மூலம் அவர் அனுப்பியுள்ளார். அதன் முக்கிய விவரம்:
நான் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாகப் பொறுப்பெற்று 7 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. தற்போதுவரை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பணிபுரிவது எனது அதிர்ஷ்டம். சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே. சந்துரு, 95,607 வழக்குகளுக்கு தீர்ப்பளித்தார்.
அவரைப் போல, நானும் 1,03,685 வழக்குகளுக்கு தீர்ப்பளித்திருந்தாலும், அவற்றில் 64,798 வழக்குகள்தான் முக்கியமானவை.
கடந்த 2017-ஆம் ஆண்டில் என்னுடன் மேலும் 5 நீதிபதிகள் பதவி ஏற்றனர். எங்களில் ஒருவரான நீதிபதி ஆதிகேசவலு உடல்நலக் குறைவு ஏற்பட்டு, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவர் விரைவில் குணமடைந்து மீண்டும் வழக்கம்போல செயல்பட ஆண்டவனை பிரார்த்திப்போம்.
நாம் வாழ்க்கையில் நிச்சயமற்ற தன்மைகளை அறிந்திருந்தாலும், இன்னும் தொடர்ந்து திட்டமிட்டுக் கொண்டிருக்கிறோம். இதற்கு நானும் விதிவிலக்கு அல்ல.
நான் தவறான தீர்ப்பை வழங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது வழக்குரைஞர்களாகிய உங்களது பொறுப்பு.
எனவே, நீங்கள் பாவம், புண்ணியம் என்ற கருத்தை நம்புங்கள். நீதிபதியின் கோபம் தற்காலிகமானதே. அது வழக்கின் முடிவில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது. உங்களது ஒத்துழைப்பைக் கோருகிறேன். உங்களது வாழ்த்துகளுடன், நான் 8-ஆம் ஆண்டில் பணியைத் தொடருகிறேன்.
தமிழ் இலக்கியவாதி மா. அரங்கநாதனின் மகனான தற்போதைய சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை (பொறுப்பு) நீதிபதி ஆர். மகாதேவன் எழுதிய 'சித்தி' என்ற சிறு கதையில் விளையாட்டு வீரரைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் அந்த வீரர் வெற்றி பெறுவதை நோக்கமாகக் கொண்டிருக்காமல், ஓடுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பார்.
இந்தக் கதாபாத்திரம் போல நானும் லட்சியத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டிருப்பேன் என அந்தக் கடி தத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.