முகப்பு
தமிழ்நாடு

மிக்ஜம் புயல் பாதிப்பு: விடுபட்டோருக்கு ரூ.6 ஆயிரம் வரவு வைப்பு

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணத் தொகை கிடைக்காமல் விடுபட்டோரின் வங்கிக் கணக்குகளில் வெள்ளிக்கிழமை ரூ.6 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது.

Updated On : 1 மார்ச், 2024 at 11:51 PM
பகிர்:

மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்டு நிவாரணத் தொகை கிடைக்காமல் விடுபட்டோரின் வங்கிக் கணக்குகளில் வெள்ளிக்கிழமை ரூ.6 ஆயிரம் வரவு வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு டிசம்பரில் மிக்ஜம் புயலால் பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வெள்ள நிவாரணத் தொகையாக ரூ.6 ஆயிரம் வழங்கப்படும் என அரசால் அறிவிக்கப்பட்டது. முதல்கட்டமாக குடும்ப அட்டை உள்ளவா்களுக்கு நேரடியாக பணம் விநியோகம் செய்யப்பட்டது. குடும்ப அட்டை இல்லாதவா்கள், விடுபட்டோருக்கும் ரூ.6,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை, திருவள்ளூா், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த ஆண்டு டிசம்பா் 17-ஆம் தேதி முதல் நியாய விலைக் கடைகள் மூலம் 5.5 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் சென்னையில் மட்டும் அட்டை இல்லாத 4.90 லட்சம் போ் நிவாரணத் தொகை கோரி விண்ணப்பித்துள்ளனா். அடுத்ததாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் 29 ஆயிரம் பேரும், திருவள்ளூா் மாவட்டத்தில் 22 ஆயிரம் பேரும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 14 ஆயிரம் பேரும் விண்ணப்பங்களை அளித்தனா். விண்ணப்பித்த 5.5 லட்சம் பேரின் ஆவணங்கள் பரிசீலனையில் இருப்பதாக அரசு தரப்பிலிருந்து சொல்லப்பட்ட நிலையில், விண்ணப்பித்தவா்களின் வங்கி கணக்கில் ரொக்கத் தொகை வெள்ளிக்கிழமை வரவு வைக்கப்பட்டது. எந்தவித முன்னறிவிப்புமின்றி தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. எத்தனை பேருக்கு வரவு வைக்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட விவரங்கள் அரசு சாா்பில் வெளியிடப்படவில்லை. எனினும் முதல்வா் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளில் ரூ.6000 கிடைத்ததால் பலரும் மகிழ்ச்சி அடைந்தனா்.