முகப்பு
தமிழ்நாடு

மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ. 12,000 ஆக உயர்த்தப்படும்: திமுக தேர்தல் அறிக்கை!

திமுக தேர்தல் அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ள 'மீன்வளம் மற்றும் மீனவர் நலன்’ சார்ந்த 12 அறிவிப்புகள் பற்றி...

Updated On : 29 மார்ச், 2026 at 3:51 PM
திமுக தேர்தல் அறிக்கையை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டார். - கோப்புப் படம்
பகிர்:

மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ. 12,000- ஆக உயர்த்தப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23 நடக்கவுள்ளதைத் தொடர்ந்து திமுக தேர்தல் அறிக்கையை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிட்டார்.

பல்வேறு புதிய அறிவிப்புகள் அறிவிக்கப்பட்ட நிலையில் அதில், 'மீன்வளம் மற்றும் மீனவர் நலன்’ சார்ந்த 12 அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவை,

1. மீன்பிடி தடைக்கால சிறப்பு நிவாரணத் தொகை ரூ. 8,000-இல் இருந்து ரூ. 12,000- ஆக உயர்த்தி வழங்கப்படும்.

2. மீன்பிடி குறைவுகால சிறப்பு நிவாரணத் தொகை 6000 ரூபாயிலிருந்து 9000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.

3. மீன்பிடித் துறைமுகங்கள் மற்றும் மீன் இறங்குதளங்கள் ஆகியவற்றை முழுமையாகப் பயன்படுத்தி மீனவர்கள் தங்களின் வருவாயை பெருக்குவதற்குத் தேவையான நவீன உட்கட்டமைப்பு வசதிகள் அங்கு ஏற்படுத்தித் தரப்படும்.

4. கடற்பாசி வளர்ப்பை மீனவப் பெண்களிடையே ஊக்கப்படுத்தி அவர்களைத் தொழில் முனைவோராக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். இதன் மூலம் அவர்கள் கூடுதல் வருவாய் ஈட்டுவதற்கான வழிவகை ஏற்படுவதுடன் கடற்பாசி உற்பத்தியும் 30,000 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும்.

5. கடலோர நீர்வாழ் உயிரின வளர்ப்பு மண்டலங்கள் (Aqua Zones) உருவாக்கப்பட்டு அதன் மூலம் மீன் உற்பத்தி அதிகரிக்கப்படும்.

6. கடல் கூண்டு மீன் வளர்ப்பை ஊக்குவித்து, உற்பத்தியை 200 டன்னிலிருந்து 400 டன்னாக உயர்த்துவோம்.

7. 100 கோடி மீன் குஞ்சு உற்பத்தி செய்வதற்குத் தேவையான புதிய மீன் பண்ணைகள் அமைக்கப்படும்.

8. மீனவப் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மீன் விற்பனை அங்காடிகள் முக்கிய நகரங்களில் அமைக்கப்படும்.

9. மீன் மற்றும் இறால் வளர்ப்புக் கொள்கை உருவாக்கப்பட்டு அதனடிப்படையில், மீன் மற்றும் இறால் வளர்ப்பு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும்.

10. தமிழ்நாட்டின் உள்நாட்டு மீன் உற்பத்தி, தற்போது உள்ள நிலையில் இருந்து அடுத்த 5 ஆண்டுகளில் இரட்டிப்பாக்கப்படும்.

11. மீன் சில்லறை விற்பனை, கருவாடு சில்லறை விற்பனை, கடற்பாசி வளர்ப்பது போன்ற சிறு தொழில்களில் ஈடுபட்டுள்ள பெண்களுக்கு அடையாள அட்டை வழங்கப்படும்.

12. இந்திய - இலங்கை ஒப்பந்தம் என்ற பெயரில் தமிழ்நாட்டின் எதிர்ப்பையும் மீறி கச்சத்தீவு இலங்கைக்கு அளிக்கப்பட்டதின் விளைவாகத் தமிழ்நாட்டு மீனவர்கள் கைது செய்யப்படுவது, அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் என நமது மீனவர்கள் சொல்லொணாத் துயரத்தைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களுக்கு மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்கும் அதேவேளையில், இந்தச் சிக்கலுக்கு நிரந்தரத் தீர்வு காண இந்திய - இலங்கை ஒப்பந்தம் மீளாய்வுச் செய்யப்பட்டு, கச்சத்தீவை மீட்கத் தொடர்ந்து ஒன்றிய அரசை வலியுறுத்துவோம்.

summary

Special Relief Assistance during Fishing Ban Period to be Increased to Rs. 12,000: DMK Election Manifesto

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.