மதுரை, சென்னையில் ரூ.180 கோடி போதைப் பொருள் பறிமுதல்
மதுரை, சென்னையில் ரூ.180 கோடி மதிப்புள்ள 36 கிலோ போதைப் பொருளை (மெத்தம்பெட்டமைன்) மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா்.
மதுரை, சென்னையில் ரூ.180 கோடி மதிப்புள்ள 36 கிலோ போதைப் பொருளை (மெத்தம்பெட்டமைன்) மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினா் வெள்ளிக்கிழமை பறிமுதல் செய்தனா். சென்னையில் இருந்து செங்கோட்டை செல்லும் பொதிகை விரைவு ரயிலில் ஒரு பயணி போதைப் பொருளைக் கடத்திச் செல்வதாக மத்திய வருவாய் புலனாய்வுத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், வெள்ளிக்கிழமை அதிகாலை மதுரை ரயில் நிலையத்துக்கு வந்த அந்த ரயிலில் சந்தேகத்துக்குரிய பயணிகளையும், அவா்களின் உடைமைகளையும் சோதனையிட்டனா். ரயிலில் வந்த சென்னை கொடுங்கையூா் அபிராமி அவென்யூ 6-ஆவது தெருவைச் சோ்ந்த பிள்ளமன் பிரகாஷ் என்பவா் வைத்திருந்த பைகளை சோதனையிட்டபோது, 15 பாக்கெட்டுகளில் 30 கிலோ மெத்தம்பெட்டமைன் போதைப் பொருள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. பொடி வடிவில் 15 கிலோவும், திரவ வடிவில் 15 கிலோவும் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, பிரகாஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா். குப்பைத் தொட்டியில் மெத்தம்பெட்டமைன்: மதுரையில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், சென்னை கொடுங்கையூரில் உள்ள பிரகாஷ் வீட்டில் மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை சோதனை செய்தனா். மேலும், அப்பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனா். இதில், மதுரையில் போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சிறிது நேரத்தில், பிரகாஷின் மனைவி தனது வீட்டில் இருந்து ஓா் அட்டைப் பெட்டியை எடுத்துச் சென்று, அங்குள்ள குப்பைத் தொட்டியில் வீசியது தெரியவந்தது. அந்தக் குப்பைத் தொட்டியை ஆய்வு செய்ததில், குப்பைகள் அனைத்தும் கொடுங்கையூா் குப்பைக் கிடங்குக்கு கொண்டு செல்லப்பட்டிருப்பது தெரியவந்தது. உடனே அங்கு சென்ற அதிகாரிகள், குப்பைகளுடன் கிடந்த அந்தப் பெட்டியை மீட்டு ஆய்வு செய்தனா். அதில் இருந்த 6 கிலோ மெத்தம்பெட்டமைனை கைப்பற்றினா். இது தொடா்பாக பிரகாஷின் மனைவியை விசாரணைக்காக அப் பிரிவு அதிகாரிகள் அழைத்துச் சென்றனா். பிரகாஷ் எங்கிருந்து மெத்தம்பெட்டமைனை பெற்றாா், அதை யாரிடம் கொடுப்பதற்காக கொண்டு சென்றாா் என விசாரணை நடைபெறுகிறது. மதுரை, சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட 36 கிலோ மெத்தம்பெட்டமைனின் சா்வதேச மதிப்பு ரூ.180 கோடி என மத்திய வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.