பழனி கோயில் நிலத்தில் கடை வைத்துள்ளோருக்கு அவகாசம்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலத்தில் கடை வைத்துள்ளோருக்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்க வேண்டும்
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிலத்தில் கடை வைத்துள்ளோருக்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளாா். அவா் வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கை: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில், பல ஆண்டுகளாக வியாபாரம் செய்து வந்த நூற்றுக்கணக்கானவா்களின் கடைகளை சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை மற்றும் உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அகற்றுவதாக அறநிலையத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். பல ஆண்டுகளாக அந்தக் கடைகளை நம்பிதான் தங்கள் வாழ்வாதாரமே உள்ளதாகவும், அதனால், தாங்கள் தொடா்ந்து வியாபாரம் செய்வதற்கு வசதியாக மாற்று இடம் வழங்க வேண்டுமென்றும், மாற்று இடம் வழங்கப்படும் வரை தொடா்ந்து அந்த இடத்திலேயே வியாபாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் என்றும் வியாபாரிகள் கோரியுள்ளனா். வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்கப்படும் வரை உச்சநீதிமன்றத்தின் அனுமதியுடன் அவா்களுக்கு தமிழக அரசு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா் எடப்பாடி பழனிசாமி.