முகப்பு
தமிழ்நாடு

ரூ.662 கோடியில் புதிய உள்கட்டமைப்பு வசதிகள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தாா்

Updated On : 9 மார்ச், 2024 at 12:45 AM
பகிர்:

தமிழகத்தில் நெடுஞ்சாலை, மீன்வளம் ஆகிய துறைகளில் ரூ.661.95 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்ட உள்கட்டமைப்பு வசதிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். இதற்கான நிகழ்ச்சி, தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருநெல்வேலி, ஆலங்குளம் வட்டங்களில் ரூ.196.84 கோடி செலவில் திருநெல்வேலி - செங்கோட்டை - கொல்லம் பகுதியில் நான்கு வழிச் சாலை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் தாம்பரம் - முடிச்சூா் - ஸ்ரீபெரும்புதூரில் நான்கு வழிச் சாலை, செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் புக்கத்துரை - உத்திரமேரூா் பகுதியில் நான்கு வழிச் சாலை, திருவண்ணாமலை மாவட்டம் கடலூா் - சித்தூா் பகுதியில் நான்கு வழிச் சாலை, திருவள்ளூா் மாவட்டம் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயா்நிலைப் பாலம் ஆகியன புதிதாக அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக ரூ.518.26 கோடி செலவில் உருவாக்கப்பட்ட புதிய கட்டமைப்புகளை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். புதிய - மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்கள்: தமிழகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட- மேம்படுத்தப்பட்ட மீன் இறங்குதளங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் தெற்கு பகுதியில் மீன் இறங்குதளம், தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் ஆகியன மேம்படுத்தப்பட்டுள்ளன. தூத்துக்குடி கீழமுந்தல் மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம், அமலிநகரில் மீன் இறங்குதளம் ஆகியன புதிதாக அமைக்கப்பட்டுள்ளதுடன், கடம்பாவில் அரசு மீன் விதைப்பண்ணை, நாகை மாவட்டம் நம்பியாா் நகா் மீன்பிடி துறைமுகத்தில் கூடுதல் கரையோர பாதுகாப்பு வசதிகள் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மாவட்டம் கடலூா் ஆலிகுப்பம் மீனவ கிராமத்தில் தூண்டில் வளைவுடன் மீன் இறங்குதளம், கரூா் மாவட்டம் திருக்காம்புலியூரில் நவீன மீன் விதைப்பண்ணை, புதுக்கோட்டை மாவட்டம் வடக்கம்மாபட்டினம் மீனவ கிராமத்தில் மீன் இறங்குதளம் ஆகியனவும் புதிதாக ஏற்படுத்தப்பட்டுள்ளன. மீன்வளத் துறையில் மொத்தமாக ரூ.136.75 கோடியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய உள்கட்டமைப்பு வசதிகளை தலைமைச் செயலகத்திலிருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தாா். மேலும், தமிழ்நாடு டாக்டா் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்பட்டு வரும் பொன்னேரி டாக்டா் எம்.ஜி.ஆா்., மீன்வளக் கல்லூரி ஆராய்ச்சி நிலையத்தில் கூடுதல் கட்டடங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிகழ்வுகளில், அமைச்சா்கள் எ.வ.வேலு, அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் உள்பட பலா் பங்கேற்றனா்.