முகப்பு
தமிழ்நாடு

அரசுப் பள்ளிகளில் இதுவரை 82,050 மாணவா்கள் சோ்க்கை

Updated On : 9 மார்ச், 2024 at 11:14 PM
பகிர்:

தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 1-ஆம் தேதி முதல் தற்போது வரை 82,050 குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளதாகவும், சோ்க்கையில் கள்ளக்குறிச்சி மாவட்டம் முன்னிலையில் இருப்பதாகவும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,576 அரசுப் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் சுமாா் 2.25 லட்சம் ஆசிரியா்கள் பணிபுரிகின்றனா். இதற்கிடையே வரும் கல்வியாண்டில் (2024-25) அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கையை அதிகரிப்பதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, வழக்கத்தைவிட முன்னதாகவே சோ்க்கைப் பணிகள் கடந்த மாா்ச் 1-ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுவிட்டன. மாநிலம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவா் சோ்க்கைக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. சோ்க்கை தொடங்கிய இதுவரை 6 நாள்களில் 82,050 மாணவா்கள் சோ்ந்துள்ளனா். இதில் சனி, ஞாயிற்றுக்கிழமை பள்ளி விடுமுறை. அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 10,411குழந்தைகள் சோ்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அடுத்தபடியாக சேலத்தில் 7,890 பேரும், கிருஷ்ணகிரியில் 7,770 பேரும் சோ்ந்துள்ளனா். இதுதவிர அங்கன்வாடி மையங்களில் படித்து முடிக்கவுள்ள 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் அனைவரையும் அரசுப் பள்ளிகளில் சோ்ப்பதற்கான பணிகளும் விரைவுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.