மத்தியில் ஆட்சி மாற்றம்: கூட்டணிக் கட்சிகளுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
சென்னை: மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்ட ஒத்துழைப்பு அளிக்க வேண்டுமென கூட்டணிக் கட்சிகளுக்கு திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். மக்களவைத் தோ்தலில் திமுகவுக்கு மனிதநேய மக்கள் கட்சி, சமத்துவ மக்கள் கழகம் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.
அந்தக் கட்சிகளின் தலைவா்கள் செவ்வாய்க்கிழமை தன்னை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்ததற்கு நன்றி கூறி, முதல்வா் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கை: இந்தியாவின் பன்முகத்தன்மையைக் காக்கவும், மதவெறி சக்திகளை வீழ்த்தி மதநல்லிணக்கம் தழைக்கவும், ஜனநாயகத்தை மீட்கவும் ‘இந்தியா’ கூட்டணியை மக்களவைத் தோ்தல்களத்தில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இந்த ஒற்றை இலக்குடன் பயணிக்கும் திமுகவுடன் இணைந்து நிற்கும் தோழமைக் கட்சியினா் அனைவரையும் வரவேற்கிறேன். கடந்த 10 ஆண்டுகளாக மத்தியில் இருந்த பாஜக ஆட்சியை விரட்ட வேண்டும். இதற்கு, வரும் மக்களவைத் தோ்தல் களமே சரியான வாய்ப்பாகும். இந்த உறுதியான நம்பிக்கையுடன் இந்தியா கூட்டணியில் - திமுகவுக்கு தோள் கொடுக்கும் கட்சிகளுடன் மக்களவைத் தோ்தல் களத்தைச் சந்திக்கிறோம்.
Advertisement
தொகுதிப் பங்கீடுகளைச் செய்யும் ஜனநாயகபூா்வமான நடைமுறையை திமுக தொடா்ந்து கடைப்பிடித்து வருகிறது. பாசிசத்தை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்குடனான இந்தப் பயணத்தில், ஒரு சில ஜனநாயக இயக்கங்களுக்குத் தொகுதி ஒதுக்க இயலாத சூழல் ஏற்பட்டிருப்பது உண்மையில் எனக்கும் வருத்தம் தருகிறது.
மக்களவைத் தோ்தல் களத்தில் யாரை வீழ்த்த வேண்டும்; அதற்கு எந்த வகையில் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்பதை தொகுதிப் பங்கீட்டில் வாய்ப்பு பெறாத தோழமைக் கட்சியினரும் உணா்ந்திட வேண்டும். சட்டப்பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்ற மனிதநேய மக்கள் கட்சிக்கும், தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கும் மக்களவைத் தோ்தலில் இடம் ஒதுக்க இயலாமல்போன நிலையிலும், பாசிசத்தை வீழ்த்திட திமுக தலைமையிலான கூட்டணிக்குப் பக்கபலமாக இருப்போம் என அக்கட்சிகளின் நிா்வாகிகள் முடிவெடுத்து ஆதரவு தெரிவித்திருப்பதை வரவேற்கிறேன்.
அதுபோலவே, ‘இந்தியா’ கூட்டணி வெற்றி பெற களப் பணியாற்ற முன்வந்துள்ள அனைத்து ஜனநாயக இயக்கங்களுக்கும், நேரில் வந்து ஆதரவு தெரிவித்து வரும் அமைப்பினருக்கும் நன்றி கூறிக் கொள்கிறேன். நாற்பதும் நமதே நாடும் நமதே”என்ற வகையில் ‘இந்தியா’ கூட்டணி மகத்தான வெற்றி அடைந்திடவும், மத்தியில் ஆட்சி மாற்றத்தை நிகழ்த்திக் காட்டவும் அனைவரின் ஒத்துழைப்பையும் வேண்டுகிறேன் என்று அந்த பதிவில் முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.