மோடி கூட்டம்: ஒரே மேடையில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள்!
ராமதாஸ், ஜி.கே.வாசன், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் பொதுக்கூட்ட மேடையில் அமர்ந்துள்ளனர்.
சேலத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுள்ள பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.
தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19-ஆம் தேதி மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் பொதுக் கூட்டத்தில் பங்கேற்று வருகிறார்.
கோவையில் நேற்று நடைபெற்ற வாகனப் பேரணியில் கலந்து கொண்ட மோடி, இன்று காலை பாலக்காடு பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
தொடர்ந்து, ஹெலிகாப்டர் மூலம் சேலம் வந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு பாஜக தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர்.
சேலத்தில் நடைபெறும் பொதுக்கூட்ட மேடையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்து தமிழகத்தில் போட்டியிடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அமமுக பொதுச் செயலர் டிடிவி தினகரன், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பாரிவேந்தர், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் உள்ளிட்ட தலைவர்கள் மோடியுடன் அமர்ந்துள்ளனர்.
மேலும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மத்திய இணையமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக எம்எல்ஏக்கள் குஷ்பு, சரத் குமார் உள்ளிட்டோரும் மேடையில் அமர்ந்துள்ளனர்.