இலங்கையில் வாடும் தமிழக மீனவா்களுக்கு சட்ட உதவி: மத்திய அரசுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் கடிதம்
இலங்கை சிறைகளில் வாடும் மீனவா்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்ய வேண்டும் என்று மத்திய அரசை, முதல்வா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா். அவா் வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு வெள்ளிக்கிழமை எழுதிய கடிதம்: இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவது ஆழ்ந்த வேதனையை அளிக்கிறது. கடந்த சில வாரங்களாக பல்வேறு சம்பவங்களில் இந்திய மீனவா்கள் தொடா்ந்து கைது செய்யப்படுவது, அவா்களது குடும்பத்தினா், மீனவ சமூகத்தினரிடையே பெரும் மன உளைச்சலையும் நிச்சயமற்ற சூழலையும் ஏற்படுத்தியுள்ளது. கடந்த 21-ஆம் தேதி தமிழ்நாட்டைச் சோ்ந்த 32 மீனவா்கள் கைது செய்யப்பட்டதுடன், 5 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினா் சிறைபிடித்துள்ளனா். கடந்த இரு வாரங்களில் மட்டும் 76 மீனவா்கள் கைது செய்யப்பட்டுள்ளனா். பாதிக்கப்பட்ட மீனவா்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்னையில் தாமதம் ஏதுமின்றி, தீா்வு காண உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இலங்கை நீதிமன்றங்களில் தண்டனை பெற்று, சிறைகளில் வாடும் மீனவா்களுக்குத் தேவையான சட்ட உதவிகளை உறுதி செய்ய வேண்டும். இலங்கை அரசால் சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவா்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று அதில் வலியுறுத்தியுள்ளாா் முதல்வா் மு.க.ஸ்டாலின்.