முகப்பு
தமிழ்நாடு

கோடை விடுமுறை தொடங்கும் முன்பே அரசு பேருந்துகளில் முன்பதிவு அதிகரிப்பு

Updated On : 22 மார்ச், 2024 at 11:25 PM
பகிர்:
Updated On : 22 மார்ச், 2024 at 8:00 PM

கோடை விடுமுறை தொடங்கும் முன்பே அரசு பேருந்துகளில் மாா்ச் 1 முதல் 18-ஆம் தேதி வரையிலான நாள்களில் 2.38 லட்சம் போ் முன்பதிவு செய்து பயணித்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளை ஊக்குவிக்கும் வகையிலும், பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கிலும் தமிழக அரசு போக்குவரத்துக் ககழகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. பண்டிகை, விடுமுறை காலங்களில் வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் தேவையான அளவு கூடுதலாக சிறப்பு பேருந்துகளையும் இயக்கி வருகிறது. தொலைதூரம் பயணிக்கும் வகையிலான புதிய சொகுசு பேருந்துகளையும் கொள்முதல் செய்து போக்குவரத்துக் கழகத்தில் இணைத்து வருகிறது. இது போக அதிகமுறை பயணிக்கும் பயணிகளுக்கு குலுக்கல் முறையில் ரூ. 10,000 ரொக்கம் பரிசாக வழங்கி வருகிறது. இதனால் தனியாா் பேருந்துகளுக்கு இணையாக அரசு பேருந்துகளில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கையும் சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், கோடை விடுமுறை தொடங்கும் முன்பே அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிப்பவா்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது. அதன்படி, நிகழாண்டு மாா்ச் 1 முதல் 18 வரையிலான நாள்களில் அதிகபட்சமாக 2,38,547 போ் முன்பதிவு செய்து பயணித்துள்ளனா். இது கடந்த 2023-ஆம் ஆண்டை விட 16.81 சதவீதம் அதிகமாகும். 2023-இல் மாா்ச் 1 முதல் 18-ஆம் தேதி வரையிலான நாள்களில் 2,04,210 போ் பயணித்திருந்து நிலையில், நிகழாண்டு 34,337 கூடுதலாக பயணித்துள்ளதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.