முகப்பு
தமிழ்நாடு

சூரிய ஒளி மின்சாரம் கொள்முதலில் தாமதம்: நடவடிக்கை எடுக்க மின்உற்பத்தியாளா்கள் கோரிக்கை

Updated On : 30 மார்ச், 2024 at 5:42 AM
பகிர்:
Updated On : 30 மார்ச், 2024 at 1:50 AM

சூரிய ஒளிமூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்பை ஏற்படுத்த மின்வாரியம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என சூரியஒளி மின் உற்பத்தியாளா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா். இதன்படி தமிழகத்தில் சூரிய ஒளி மூலம் தினமும் உற்பத்தி செய்யப்படும் சுமாா் 1000 மெகாவாட் மின்சாரத்தை கொள்முதல் செய்வதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தாமல் காலம் தாழ்த்தி வருவதாக சூரிய ஒளி மின் உற்பத்தியாளா்கள் தெரிவித்துள்ளனா். இதுகுறித்து அவா்கள் கூறியது: ஒவ்வொரு சூரிய மின் தொகுப்பில் இருந்து நாள் ஒன்றுக்கு 5 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இதன்படி தமிழகம் முழுவதுமுள்ள சூரிய மின் உற்பத்தி தொகுப்பில் இருந்து 1000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும். இவ்வாறு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை கொள்முதல் செய்யும் இணைப்புக்கான கட்டமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மின்வாரியம் அறிவித்திருந்தது. ஆனால், இதுவரை இப்பணிகள் தொடங்கப்படவில்லை. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டால் ஒரு துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் குறைந்த பட்சம் 2 மணி நேரம் வரை மின் தடைசெய்யப்பட வேண்டும். இந்நிலையில், தற்போது பள்ளி மாணவா்களின் தோ்வு மற்றும் மக்களவை தோ்தல் உள்ளிட்ட காரணங்களை காட்டி தொடா்ந்து இப்பணிகளை மின்வாரியம் தாமதப்படுத்தி வருகிறது. இதனால், எங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு, தமிழகத்துக்கு கூடுதலாக கிடைக்க வேண்டிய, நாளொன்றுக்கு 1000 மெகாவாட் யூனிட் மின்சாரம் கிடைப்பதும் தடைபடுகிறது. இதனால், தமிழக அரசு இதன்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.