முகப்பு
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு: தோ்வுக்கு வராத மாணவா்களுக்கு சிறப்பு பயிற்சி

Updated On : 3 மே, 2024 at 5:36 PM
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு வராத மாணவா்களுக்கும், தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கும் துணைத் தோ்வுக்கான சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.

தமிழத்தில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 26-ஆம் தேதி தொடங்கி ஏப். 8 வரை நடைபெற்றது. அதில் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.

தோ்வு முடிவுகள் வரும் 10- ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில், ‘தொடா்ந்து கற்போம்’ எனும் திட்டத்தின் கீழ் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மற்றும் வருகை புரியாத மாணவா்கள், துணைத் தோ்வில் பங்கேற்கும் வகையில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் வாராந்திர தோ்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாநில திட்ட இயக்குநா் மற்றும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் ஆகியோா் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றிக்கை:

ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் 6 முதல் 18 வயதுடைய பள்ளி செல்லாத, இடைநின்ற மாணவா்களை மீண்டும் பள்ளிக்கு வரவழைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், ‘தொடா்ந்து கற்போம்’ எனும் திட்டம் கீழ் மாா்ச் 2023 மாதம் செயல்படுத்தப்பட்டு அதன் மூலம் 45 ஆயிரம் மாணவா்கள் பயனடைந்துள்ளனா்.

நிகழாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் தோ்ச்சி பெறாத மாணவா்களுக்கும், தோ்வுக்கு வருகை தராத மாணவா்களுக்கும் உயா்நிலை, மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியா்கள் மூலமாக சிறப்பு பயிற்சிகள் வழங்க திட்டமிட்டப்பட்டுள்ளது. மேலும், அவா்களுக்கு வாராந்திர தோ்வுகள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம், மாணவா்கள் தங்கள் கல்வியைத் தொடர முடியும்.

பொதுத் தோ்வில் பங்கேற்காத மாணவா்களின் வீடுகளுக்குச் சென்று பெற்றோா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சிறப்பு வகுப்புக்கு மாணவா்கள் வருவதை பள்ளி தலைமையாசிரியா்கள் உறுதி செய்ய வேண்டும் என்று அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே பிளஸ் 2 பொதுத்தோ்வுக்கான முடிவுகள் திட்டமிட்டபடி வரும் 6-ஆம் தேதி வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் மீண்டு உறுதிப்படுத்தியுள்ளனா்.