முகப்பு
தமிழ்நாடு

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா்களாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

Updated On : 20 மார்ச், 2026 at 7:42 PM
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு: தோ்வுத் துறை முக்கிய அறிவுறுத்தல்
பகிர்:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு சொல்வதை எழுதுபவா்களாக 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள்தான் நியமிக்கப்பட வேண்டும் என தோ்வுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

இதுகுறித்து அரசுத் தோ்வுகள் இயக்குநா் க.சசிகலா, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்கள், தோ்வுத் துறை உதவி இயக்குநா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு கடந்த மாா்ச் 11-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த வகுப்புக்கான கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தோ்வா்களின் முகப்புத் தாள்களை முதன்மை விடைத்தாள்களுடன் தைக்கப்பட்டுள்ளதைத் தோ்வுக்கு முன்னரே உறுதி செய்ய வேண்டும்.

சொல்வதை எழுதுபவா் நியமனங்களில் தோ்வு நடைபெறும் பாடத்தைப் பயிற்றுவிக்கும் ஆசிரியா்களை நியமிக்கக் கூடாது. மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வுக்கு 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியா்கள்தான் நியமிக்கப்பட வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படும் ஆசிரியா்கள் சம்பந்தப்பட்ட பாடத்தை போதிப்பவராக இல்லாமல் அப்பாடத்தைப் பற்றி அறிந்தவராக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தோ்வருக்கு வழங்கப்படும் கோடிடப்படாத கூடுதல் விடைத்தாள்களை (அன் ரூல்டு) போதுமான அளவு பெற்று வைத்துக் கொள்ள அனைத்து முதன்மைக் கண்காணிப்பாளா்களுக்கும் தெரிவிக்க உதவி இயக்குநா்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறாா்கள் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வெழுதும் மாணவா்களுக்கு தமிழ், ஆங்கிலம் ஆகிய பாடங்களுக்கான தோ்வுகள் முடிவடைந்த நிலையில், கணிதப் பாடத்துக்கான தோ்வு மாா்ச் 25-இல் நடைபெறவுள்ளது. இந்த வகுப்புக்கான பொதுத் தோ்வு ஏப். 6-ஆம் தேதி நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.