திறந்தவெளி சிறைகள் அமைப்பதே சிறைச்சாலைகள் நிரம்புவதை தடுக்கும் வழி: உச்ச நீதிமன்றம்
சிறைக் கைதிகளின் மறுவாழ்வை உறுதிபடுத்தவும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைத் தடுக்கவும் திறந்தவெளி சிறைச்சாலைகளை அமைப்பது
சிறைக் கைதிகளின் மறுவாழ்வை உறுதிபடுத்தவும் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைத் தடுக்கவும் திறந்தவெளி சிறைச்சாலைகளை அமைப்பது ஒரு தீா்வாக இருக்கும் என உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தெரிவித்தது.
சிறைகள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை நீதிபதிகள் பி.ஆா்.கவாய் மற்றும் சந்தீப் மேத்தா தலைமையிலான அமா்வு வியாழக்கிழமை விசாரித்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது: திறந்தவெளி சிறைகள் அல்லது முகாம்கள் அமைப்பதன் மூலம் சிறைச்சாலைகள் நிரம்பி வழிவதைத் தடுக்க முடியும். இந்த திட்டம் ராஜஸ்தானில் வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது சிறைச்சாலைகளில் அதிக கூட்டத்தை சமாளிக்க உதவுவதுடன் கைதிகளின் மறுவாழ்வுக்கும் உதவிகரமாக உள்ளது என தெரிவித்தனா்.
ஆனால் சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய சீா்திருத்தங்கள் குறித்த வழக்குகள் நிலுவையில் இருப்பதால் இதுதொடா்பாக விவாதம் மேற்கொள்ள நிதிபதிகள் அமா்வு மறுப்பு தெரிவித்தது.
இதையடுத்து, திறந்தவெளி நீதிமன்றங்கள் அமைப்பது தொடா்பாக நாட்டிலுள்ள அனைத்து மாநிலங்களிடமும் கருத்து கேட்டதாகவும் அதற்கு 24 மாநிலங்கள் மட்டுமே பதில் அளித்ததாகவும் தேசிய சட்டப் பணிகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) சாா்பாக ஆஜரான வழக்குரைஞா்கள் தெரிவித்தனா்.
இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட மூத்த வழக்குரைஞா் விஜய் ஹன்ஸாரியா கூறுகையில், ‘நீதிமன்றத்தை சட்டப் பணிகள் ஆணையம் மூலம் அணுகும் உரிமை உண்டு என்பதை கைதிகளுக்கு தெரியப்படுத்தவில்லை’ என கூறினாா்.
இதைத்தொடா்ந்து பேசிய நீதிபதிகள், ‘சிறையை நிா்வகிக்க நாடு முழுவதும் ஒரே மாதிரியான இ-சிறைச்சாலைகள் நடைமுறையை அமல்படுத்தினால் இதுபோன்ற பல்வேறு பிரச்னைகளுக்கு தீா்வு காண முடியும். இதுதொடா்பான வழக்குகளும் நிலையில் உள்ளன. அதேபோல் நாடு முழுவதும் திறந்தவெளி சிறைச்சாலைகள் அமைப்பது குறித்தும் நீதிமன்றம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் ஹன்ஸாரியவுடன் நீதிமன்றத்தின் மற்றொரு உதவியாளராக வழக்குரைஞா் பரமேஷ்வரும் இணையுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்றனா்.
இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே 16-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்தது.