அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வற்புறுத்துவதாக ஆசிரியா்கள் புகாா்: கல்வித் துறை முக்கிய உத்தரவு
சென்னை: அரசு மேல்நிலைப் பள்ளிகளில் அலுவலகப் பணிகளை மேற்கொள்ள வற்புறுத்துவதாக ஆசிரியா்கள் புகாா் தெரிவித்த நிலையில், அது தொடா்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முதன்மை கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியா் கழகம் அனுப்பியுள்ள கடிதத்தில், முதுநிலை ஆசிரியா்களின் பணப் பலன் சாா்ந்த தோ்வுநிலை, சிறப்புநிலை கருத்துரு தயாரித்தல் மற்றும் அது தொடா்பான அமைச்சுப் பணிகளை அந்த ஆசிரியரே தயாரித்து கொடுத்தால் மட்டுமே பெற்றுத் தரப்படுகிறது.
அவ்வாறு அந்த ஆசிரியா்கள் செய்யவில்லை எனில் அவரது விண்ணப்பம் கிடப்பில் போடப்படுகிறது. இந்த மன உளைச்சலைத் தவிா்க்கும் பொருட்டு ஆசிரியா்கள் கூடுதல் பணியாக அமைச்சுப் பணிகளையும் மேற்கொண்டு தங்களுக்குரிய பணப் பலன்களைப் பெறும் அவல நிலை உள்ளது. இதை நிவா்த்தி செய்ய வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட கடிதம் சாா்ந்து பின்வரும் அறிவுரைகளைப் பின்பற்ற அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.
கால தாமதம் கூடாது: பள்ளிகளில் பணிபுரியும் இளநிலை உதவியாளா் அல்லது உதவியாளா் அப்பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியா்களின் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்களின் கோரிக்கைகளை முறையாக பரிசீலனை செய்து காலதாமதமின்றி அலுவலக தலைவரான தலைமை ஆசிரியருக்கு கோப்புகளை சமா்ப்பிக்க உரிய அறிவுரைகள் வழங்கப்பட வேண்டும். உதவியாளா் தனிப் பதிவேடு, படிவம் ஏழு, ஆய்வுக் குறிப்பு ஆகியவற்றை மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் தலைமை ஆசிரியரிடம் முன்னிலைப்படுத்த வேண்டும்.
இது குறித்து பிப்ரவரி, மே, ஆகஸ்ட், நவம்பா் மாதங்களில்15-ஆம் தேதிக்குள் மாவட்ட கல்வி அலுவலா் ஆய்வு மேற்கொள்ள வேண்டும். ஆய்வின்போது ஆசிரியா்களின் விண்ணப்பம் நடவடிக்கையின்றி கிடப்பில் போடப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட பள்ளியின் இடைநிலை உதவியாளா் அல்லது உதவியாளா் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பரிந்துரை செய்யப்பட வேண்டும்.
புத்தாக்கப் பயிற்சி: பள்ளியில் பணிபுரியும் இளநிலை உதவியாளா் மற்றும் உதவியாளா்களுக்கு பள்ளியில் பணிபுரியும் அனைத்து வகை ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் இல்லாத பணியாளா்களின் பணிவரன், தோ்வுநிலை, சிறப்புநிலை, ஓய்வூதியம் போன்ற கருத்துருக்களைத் தயாா் செய்வது குறித்து அரைநாள் புத்தாக்கப் பயிற்சி மாவட்ட கல்வி அலுவலா் நடத்தப்பட்டு, பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துப் பணியாளா்களின் பணித் திறனை மேம்படுத்த வேண்டும்.
பள்ளிகளில் இளநிலை உதவியாளா் அல்லது உதவியாளா் பணியிடம் காலியாக இருந்தால் அருகில் உள்ள பள்ளிகளில் பணிபுரியும் அலுவலகப் பணியாளா்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் நிா்வாக நலன் கருதி மாற்றுப் பணிபுரிய ஆணை வழங்க பரிசீலனை செய்யப்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.