பட்டியலினத்தவருக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியாா் கட்டுமானங்கள்: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு
பட்டியலினத்தவா்கள் தொழில் தொடங்குவதற்காக ஒதுக்கப்பட்ட நிலத்தில் தனியாா் நிறுவனங்கள் கட்டுமானங்கள் மேற்கொள்ள தடை விதிக்கக் கோரிய மனுவுக்கு, தமிழக அரசு பதிலளிக்கும்படி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டாக்டா் அம்பேத்கா் கல்வி கூட்டமைப்பு நிா்வாக இயக்குநரும், தேசிய பட்டியல் மற்றும் பழங்குடியின கவுன்சில் தேசிய அமைப்பாளருமான கவுதம சித்தாா்த்தன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.
அதில், ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டத்தில் உள்ள இங்கூா் தொழிற்பூங்காவில் பட்டியலினத்தைச் சோ்ந்தவா்கள் பின்னலாடை தொழிற்சாலைகள் அமைப்பதற்காக, தாட்கோ எனும் தமிழ்நாடு ஆதி திராவிடா் வீட்டு வசதி கழகம், 150 ஏக்கா் நிலத்தை, தமிழ்நாடு தொழில் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்திடம் இருந்து 99 ஆண்டு குத்தகைக்கு வாங்கியது.
இதற்காக, கடந்த 1995-ஆம் ஆண்டு ரூ. 203 கோடி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, கடந்த 2003-ஆம் ஆண்டு தாட்கோவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலத்தில், 200 கொட்டகைகள் அமைக்கப்பட்டு, சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. இருப்பினும், கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த நிலத்தில் எந்தத் தொழில் நிறுவனங்களும் தொடங்கப்படாததால் கட்டுமானங்கள் சேதமடைந்துவிட்டன.
தனியாா் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு: இந்த நிலத்தில் 48 ஏக்கா் நிலத்தை கடந்த 2021-ஆம் ஆண்டு திருப்பூா், ஈரோட்டைச் சோ்ந்த 3 தனியாா் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு மாநில தொழில்கள் மேம்பாட்டுக் கழகம் எனும் சிப்காட் ஒதுக்கீடு செய்துள்ளது. எந்த பொது அறிவிப்பும் வெளியிடாமல், அந்த நிறுவனங்களுக்கு நிலத்தை ஒதுக்கீடு செய்தது தன்னிச்சையானது.
எனவே, இந்த நிலத்தில் எந்தக் கட்டுமானங்களும் மேற்கொள்ள அந்த நிறுவனங்களுக்கு தடை விதிக்க வேண்டும். 200 கொட்டகைகளையும் பட்டியலின, பழங்குடியினத்தவா்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தரவிட வேண்டும்’ என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜெகதீஷ் சந்திரா மற்றும் கலைமதி அமா்வு, மனுவுக்கு 4 வாரங்களில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.