தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்ற முதுமொழியை நினைவு கூறும் வகையில், தன் தந்தை ஜமத்கினி முனிவரின் உத்தரவை வேதவாக்காக எண்ணி, தன் தாயின் தலையைத் துண்டித்தார் பரசுராமர். பிறகு மீண்டும் தன் தந்தையிடம் வரம் பெற்று தாயை உயிர்பித்தார். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில் சிரசு திருவிழா நடத்தப்படுகிறது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்யா மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோயில் சிரசு திருவிழா இன்று(மே. 14) நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கவுண்டல்ய மகா நதி கரையோரம் நடத்தப்படும் இந்த சிரசு திருவிழா, குடியாத்தம் மட்டுமல்லாது ஆந்திரம், கர்நாடாகம் மற்றும் கேரளம் ஆகிய அண்டை மாநிலங்களிலிருந்து சுமார் 1 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்ளும் கோடை கால திருவிழா ஆகும்.
இதையொட்டி, குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோயிலில் இருந்து, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள தாளம் முழங்க, அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம், கெங்கையம்மன் கோயிலில் நிறைவடைந்தது. இவ் விழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, சென்னை தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். மக்கள் வெள்ளத்தில் நீந்திச்சென்ற சிரசு, கெங்கையம்மன் கோயில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.
தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதைத்தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர்.விழாவையொட்டி, வேலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் தலைமையில் 1,500 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
குடியாத்தம் அம்மன் சிரசு திருவிழாவையொட்டி வேலூர் மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து 100க்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டன.
குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவையொட்டி, திங்கள்கிழமை தேரோட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.