செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: ஜூலை 10-க்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகாததால் வழக்கின் விசாரணை ஒத்திவைப்பு.
சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை தடுப்பு சட்ட வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் வழங்கக் கோரியும் தமிழக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை ஒத்திவைத்தது.
அமலாக்கத்துறை தரப்பில் ஆஜராகும் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா இன்று ஆஜராகாததால், அவரின் கோரிக்கையை ஏற்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அபய் எஸ்.ஓஹா, உஜ்ஜால் புய்யான் அமர்வு விசாரணையை ஒத்திவைத்துள்ளது.
உச்சநீதிமன்றத்துக்கு வருகின்ற 20 முதல் ஜூலை 8-ஆம் தேதி வரை கோடைக்கால விடுமுறை என்பதால், விடுமுறைக்கு பிறகு ஜூலை 10-ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி புதிதாக தாக்கல் செய்யப்பட்ட மனு, கடந்த மே 6- ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத் துறையின் தரப்பில், இந்த விவகாரத்தில் விரிவான வாதங்களை முன்வைக்க அவகாசம் கோரப்பட்டிருந்தது. இதையடுத்து, வழக்கு விசாரணை மே 15-க்கு ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
புதன்கிழமை விசாரணையின்போது அமலாக்கத் துறை தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மற்றொரு வழக்கு விசாரணைக்காக வேறு சிறப்பு அமர்வில் ஆஜராக வேண்டியிருப்பதால் விசாரணையை ஒத்திவைக்குமாறு கேட்டுக் கொண்டார். இதையடுத்து, விசாரணையை இன்று ஒத்திவைத்திருந்தனர்.