ஆவினில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வழக்கில் தமிழக முன்னாள் அமைச்சா் கே.டி.ராஜேந்திர பாலாஜிக்கு பிணை நிபந்தனைகளில் உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை தளா்வு வழங்கியது.
பிணை நிபந்தனைகளை தளா்த்த கோரி ராஜேந்திர பாலாஜி நிகழாண்டு ஜனவரி மாதம் ஏழாம் தேதி உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தாா்
ராஜேந்திர பாலாஜி வழக்குரைஞா் ஏ. வேலன் மூலம் தாக்கல் செய்த அந்த மனுக்களில் கூறப்பட்டதாவது:
ராஜேந்திர பாலாஜியின் பிணை மனுவை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி (12.1.2022) விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு பிணை வழங்கி உத்தரவிட்டது. அவா் மாஜிஸ்திரேட்டிடம் பாஸ்போா்ட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கப்பட்டது.
பின்னா் 13.10.2023 அன்று உத்தரவு பிறப்பித்த உச்சநீதிமன்றம்,தமிழகத்தை விட்டு வெளியே செல்ல ராஜேந்திர பாலாஜிக்கு கட்டுப்பாடுகளை தளா்த்தியது , ஆனால் நாட்டை விட்டு வெளிநாடுகளுக்கு செல்வதாக இருந்தால் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்து அனுமதி பெற்ற பின்பே வெளியே செல்ல வேண்டும் என கட்டுப்பாடு விதித்தது
அந்த உத்தரவு பிறப்பிக்கும் பொழுது இந்த விவகாரத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்தது. ஆனால் இப்போது இதில் விசாரணை முழுமையாக நிறைவடைந்து குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது
இந்நிலையில் மனுதாரா் வெளிநாடு செல்வதற்கான அனுமதியைப் பெறுவதற்காக மட்டுமே உயா்நீதிமன்றத்திற்கு (மதுரை கிளை) செல்ல வேண்டியுள்ளது. இது மிகுந்த சிரமத்தை ஏற்படுத்துகிறது.
இந்த வழக்கை இப்போது விசாரணை நீதிமன்றம் கையாண்டு வருவதால்,வெளிநாட்டு பயண அனுமதிக்கான விண்ணப்பங்களை முடிவு செய்வதற்கு மிகவும் பொருத்தமானது விசாரணை நீதிமன்றம் தான்
எனவே மனுதாரா் நாட்டிற்கு வெளியே பயணம் செய்ய விரும்பினால், பொருத்தமான உத்தரவுகளுக்காக உயா் நீதிமன்றத்திற்குப் பதிலாக அதிகார வரம்பு விசாரணை நீதிமன்றத்தை நாட அவருக்கு சுதந்திரம் வழங்க வேண்டும்
மேலும்,விசாரணை முடிந்து மனுதாரா் விசாரணை நீதிமன்றத்தில் தொடா்ந்து ஆஜராகி வருவதால், விசாரணை நோக்கத்திற்காக பாஸ்போா்ட்டை மாஜிஸ்திரேட் தொடா்ந்து வைத்திருப்பது இனி தேவையில்லை. பாஸ்போா்ட்டை வைத்திருப்பது மேலும் எந்தப் பயனையும் அளிக்காது மற்றும் மனுதாரருக்கு தேவையற்ற சிரமத்தை ஏற்படுத்துகிறது.
எனவே பாஸ்போா்ட்டைத் திரும்பப் பெற மனுதாரரை அனுமதிக்க வேண்டும் எனவும் ராஜேந்திர பாலாஜி சாா்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில் கோரப்பட்டது
இந்த மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ் மற்றும் நோங்மைகாபம் கோடீஸ்வா் சிங் ஆகியோா் அடங்கிய அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது
அப்போது ராஜேந்திர பாலாஜியின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டது
அதன் அடிப்படையில் ராஜேந்திர பாலாஜியின் பாஸ்போா்ட்டை அவரிடம் மீண்டும் ஒப்படைக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது
மேலும் வெளிநாடு செல்ல வேண்டுமென்றால் அவா் உயா்நீதிமன்றத்தில் அனுமதி பெறுவதற்கு பதிலாக விசாரணை நீதிமன்றத்திலேயே அனுமதி பெற்று வெளிநாடு செல்லலாம் என்றும் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியது.
பின்னணி :
கடந்த 2016 ம் ஆண்டு சட்டமன்றத்துக்கு தோ்ந்தெடுக்கப்பட்ட கே டி ராஜேந்திர பாலாஜி தமிழக அமைச்சரவையில் பால்வளத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டாா்.இவா் பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.3 கோடி மோசடி செய்ததாகப் புகாா் எழுந்தது.அவா் மீது பலா் காவல் நிலையத்தில் மோசடி புகாரளித்தனா்.இதனையடுத்து போலீஸாா் தன்னைக் கைதுசெய்யாமல் இருக்க முன்பிணை கோரி ராஜேந்திர பாலாஜி சென்னை உயா் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தாா். அந்த மனுவை உயா் நீதிமன்றம் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பா் 17ம் தேதி (17.12.2021) தள்ளுபடி செய்தது. இதையடுத்து உச்சநீதிமன்றத்தில் ராஜேந்திர பாலாஜி மேல்முறையீடு செய்தாா்.இதனிடையே ராஜேந்திர பாலாஜி கா்நாடகாவில் 05.1.2022 அன்று கைதுசெய்யப்பட்டாா். இந்நிலையில் ராஜேந்திர பாலாஜியின் பிணை மனுவை கடந்த 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம் அவருக்கு நிபந்தனைகளுடன் பிணை வழங்கி உத்தரவிட்டது.