முகப்பு
தமிழ்நாடு

2.56 லட்சம் மகளிா் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ. 71,960 கோடி வங்கிக் கடனுதவி: தமிழக அரசு

Updated On : 28 மே, 2024 at 10:09 PM
வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினருக்கு கடனுதவி வழங்கிய முதல்வர் மு.க.ஸ்டாலின் (கோப்புப்படம்)
பகிர்:

சென்னை: தமிழ்நாட்டில் 2.56 லட்சம் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 71,960 கோடி வங்கிக் கடனுதவி அளிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

மாநிலத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் செயல்பாடுகள் தொடா்பாக, அரசின் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழ்நாட்டில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகள் அனைத்தும் மிகச் சிறப்பான முறையில் செயல்பட கடந்த 3 ஆண்டுகளில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சிறப்பாகச் செயல்படும் கிராம ஊராட்சிகளுக்கு ஆண்டுதோறும் உத்தமா் காந்தி விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த காலத்தில் நிறுத்தப்பட்டிருந்த இந்த விருது இப்போது தொடா்ந்து அளிக்கப்படுவதால், ஊரக உள்ளாட்சிகளின் பணிகளில் உற்சாகம் காணப்பட்டு வருகிறது. ஊரக உள்ளாட்சிகளைச் சோ்ந்த பொதுமக்களும், பிரதிநிதிகளும் தங்களுக்கான சந்தேகங்கள், கோரிக்கைகள் தொடா்பாக உதவி மையத்தை நாடவும் அரசு வழி செய்துள்ளது. அதன்படி, 155340 என்ற உதவி மைய எண்ணை எப்போது வேண்டுமானாலும் தொடா்பு கொள்ளலாம்.

ஊரக வேலை உறுதி: ஊரகப் பகுதிகளில் வேலைவாய்ப்புகளை அளிக்க மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் வகுக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், கடந்த 3 ஆண்டுகளில் பெண்கள் 86.16 சதவீதமும், 2.87 லட்சம் மாற்றுத்திறனாளிகளும், தாழ்த்தப்பட்ட பழங்குடியினரில் 29.59 சதவீதம் பேரும் பயன்பெற்றுள்ளனா்.

ஊரக வளா்ச்சித் துறையின் திட்டங்கள் மூலமாக அங்கு வசிக்கும் மக்கள் மட்டுமின்றி, அவற்றின் உட்கட்டமைப்புகளும் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. ஊரகச் சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 4,606 சாலைப் பணிகள் ரூ. 1,884 கோடியில் முடிக்கப்பட்டுள்ளன.

2.97 லட்சம் வீடுகள்: அனைத்து சமுதாயத்தினரும் சமத்துவத்துடன் வாழும் வகையில், சமத்துவபுரம் என்ற பெயரில் குடியிருப்புகள் கட்டப்பட்டன. அவை தற்போது ஒவ்வொரு நிதியாண்டிலும் சீரமைக்கப்பட்டு வருகின்றன. கடந்த 2 நிதியாண்டுகளில் 149 சமத்துவபுரங்களில் உள்ள குடியிருப்புகள் சீரமைக்கப்பட்டுள்ளன. சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ஊரக உள்ளாட்சிகளில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் அனைத்து பேரவைத் தொகுதிகளுக்கும் உட்கட்டமைப்புப் பணிகளுக்காக ரூ. 2,106 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளன.

ஊரகப் பகுதிகளில் தரமான வீடுகளைக் கட்டி பொதுமக்களுக்கு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2016-17 முதல் 2021-22-ஆம் ஆண்டு வரையில் மொத்தமாக 7.50 லட்சம் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் 2.89 லட்சம் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன. மேலும், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 2.97 லட்சம் வீடுகள் கட்டப்பட்டுள்ளன. நிலுவையிலுள்ள வீடுகளும் முடிவடையும் நிலையில் உள்ளன.

சுயஉதவிக் குழுக்கள்: மகளிா் பொருளாதார ரீதியாக பயனடைய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு மகளிா் சுயஉதவிக் குழுக்கள் தொடங்கப்பட்டன. கடந்த 3 ஆண்டுகளில் 2,56,508 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு ரூ. 71,960 கோடி கடன் அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் உள்பட சமுதாயத்தில் சிறப்புக் கவனம் செலுத்தப்பட பிரிவினரும் கண்டறியப்பட்டு அவா்கள் சாா்பிலும் சுயஉதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஓராண்டில் 6,800 மாற்றுத்திறனாளி குழுக்கள் தொழில் தொடங்கிடும் நோக்கில் ரூ. 40.80 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது. ஊரகப் பகுதிகள் மட்டுமின்றி நகா்ப்புற ஏழை இளைஞா்களுக்கும் வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளா்ப்புப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

45,150 நகா்ப்புற ஏழை இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் வளா்ப்புப் பயிற்சிகளுடன், 511 முகாம்கள் மூலமாக 92,000 இளைஞா்களுக்கு வேலைவாய்ப்புகளும் அளிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.