யாகசாலையில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி ஜெயந்திநாதர். 
தமிழ்நாடு

திருச்செந்தூரில் கந்த சஷ்டி விழா பூஜைகளுடன் தொடக்கம்

விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை தொடங்கினர்.

DIN

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பிரசித்திப்பெற்ற கந்த சஷ்டி விழா இன்று காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடி விரதத்தை தொடங்கினர்.

அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஸ்தல வரலாற்றை உணர்த்துவது கந்த சஷ்டி விழாவாகும். நிகழாண்டு கந்த சஷ்டி விழா இன்று (நவ. 2) காலை யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு திருக்கோயில் அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 2 மணிக்கு உதய மார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது, தொடர்ந்து காலை 6 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் யாகசாலையில் எழுந்தருளினார்.

யாகசாலையில் கும்பங்கள் வைக்கப்பட்டதைத் தொடர்ந்து திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் ஆகியோர் பூஜை நடத்துவதற்கான நிர்வாக அனுமதியை காப்பு கட்டிய வீரபாகு பட்டருக்கு வழங்கினார். தொடர்ந்து, யாகசாலையில் பூஜைகளாகி, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. மதியம் மூலவருக்கு உச்சிகால அபிஷேகம் முடிந்து தீபாராதனை நடைபெற்றவுடன், யாகசாலையில் மகா தீபாராதனை நடைபெறுகிறது.

புனித நீராடி விரதத்தை தொடங்கிய லட்சக்கணக்கான பக்தர்கள்.

நாளை (நவ. 3) கந்த சஷ்டி 2ம் நாள் முதல் நவ. 6ம் தேதி 5ம் நாள் வரை திருக்கோயில் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. நவ. 7ம் தேதி வியாழக்கிழமை சூரசம்ஹார விழாவை முன்னிட்டு மாலை 4.30 மணிக்கு கோயில் கடற்கரையில் வைத்து சூரசம்ஹார நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. நவ. 8ம் தேதி வெள்ளிக்கிழமை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு இன்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் கடலில் புனித நீராடியும், கிரிப்பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் எடுத்தும் தங்கள் விரதத்தை துவக்கினர். இதனால் திருக்கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. பக்தர்கள் தங்குவதற்காக 18 தற்காலிக பந்தல்கள் மற்றும் கூடுதல் கழிப்பறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு தங்கி பக்தர்கள் விரதமிருந்து வருகின்றனர். கூடுதலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை திருக்கோயில் தக்கார் ரா.அருள்முருகன், இணை ஆணையர் சு.ஞானசேகரன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாளவிகா மோகனன் பிறந்த நாளில் 3 திரைப்பட போஸ்டர்கள்!

ஒரு வெளிநாட்டுப் பெண் இந்தியரை திருமணம் செய்ய 3 காரணங்கள்... அடேங்கப்பா!

அழகே.. ஐஸ்வர்யா மேனன்!

கருப்பில் ஜொலிக்கும் வெண்ணிற தேவதை.. ஸ்ருதி ஹாசன்!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 27 மாவட்டங்களில் மழை!

SCROLL FOR NEXT