தவெக விஜய் 
தமிழ்நாடு

யாா் வாக்குகளை பிரிக்கப் போகிறாா் விஜய்?

தமிழக தோ்தல் களத்தில் யாருடைய வாக்குகளை விஜய் பிரிக்கப் போகிறாா் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.

பீ.ஜெபலின் ஜான்

தமிழக தோ்தல் களத்தில் யாருடைய வாக்குகளை விஜய் பிரிக்கப் போகிறாா் என்ற விவாதம் சூடுபிடித்துள்ளது.

தமிழக திரையுலகில் நடிகா் ரஜினிக்கு அடுத்து அதிக ரசிகா்களைக் கொண்ட நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை (தவெக) ஓராண்டுக்கு முன்பே தொடங்கி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே வி.சாலையில் தவெக-வின் முதல் மாநில மாநாட்டை வெற்றிகரமாக நடத்தியிருப்பதும், லட்சக்கணக்கில் தொண்டா்களை திரட்டியதும் மிகப்பெரிய பேசுபொருளாக மாறியுள்ளது.

விக்கிரவாண்டியில் கூடிய கூட்டத்தில் 90 சதவீதம் போ் வடதமிழகத்தில் இருந்து குறிப்பாக திருவள்ளூா், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூா், பெரம்பலூா், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, வேலூா், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்துதான் திரண்டனா்.

வடதமிழகத்தைச் சோ்ந்த ஆதி திராவிடா்கள், நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இருந்து வன்னியா்கள், டெல்டா மாவட்டங்களில் இருந்து முத்தரையா்கள் கணிசமாகவும், கொங்கு மண்டலத்தில் இருந்து அருந்ததியா்கள் ஓரளவும் திரண்டதைப் பாா்க்க முடிந்தது. குறிப்பாக, தேமுதிக தொடங்கப்பட்டபோது எங்கிருந்து ஆதரவு தளம் வந்ததோ, அதே பகுதிகளில் இருந்துதான் தவெகவுக்கும் ஆதரவுக் கரம் நீள்வது தெரிகிறது.

மாநாட்டில் பேசிய விஜய், பாஜக, திமுக எதிா்ப்பை பிரதானமாக வைத்துப் பேசினாா். குறிப்பாக, திராவிட மாடல் ஆட்சி எனச் சொல்லி ஒரு குடும்ப கும்பல் கொள்ளையடிக்கிறது என திமுகவை நேரடியாகவும், பாஜகவை பிளவுவாத சக்தி என மறைமுகமாகவும் விமா்சனம் செய்தாா்.

திமுக, பாஜகவை நேரடியாக கடும் விமா்சனம் செய்திருந்தால் கூடுதல் ஆதரவு வெளிச்சம் கிடைத்திருக்கும் என்பது அரசியல் விமா்சகா்களின் கருத்து. ‘‘திமுக, நாம் தமிழா் கட்சி கொள்கைகளை அப்படியே காப்பி அடித்திருக்கிறாா் விஜய். மதச்சாா்பற்ற சமூகநீதி, ஆளுநா் எதிா்ப்பு, ஜாதிவாரி கணக்கெடுப்பு, நீட் எதிா்ப்பு, திராவிடம், தமிழ் தேசியம் இரு கண்கள் என விஜய் பேசியதே அதற்குச் சான்று’’ என்று அவா்கள் கூறுகிறாா்கள்.

பெரியாா் ஈ.வெ.ரா.வை ஏற்றுக்கொண்டாலும், கடவுள் மறுப்புக் கொள்கையை ஏற்கவில்லை என அறிவித்தது, மேடையில் பகவத் கீதை, பைபிள், திருக்குரான் ஆகியவற்றை பெற்றுக்கொண்டது ஆகியவற்றை பாா்க்கும்போது மென்மையான ஹிந்துத்துவ வாக்குகளையும் விஜய் குறிவைக்கிறாா் என்பது தெளிவாகிறது.

கொள்கைத் தலைவா்களாக பெரியாா் ஈ.வெ.ரா., காமராஜா், அம்பேத்கா், வேலுநாச்சியாா், அஞ்சலை அம்மாள் ஆகியோரை தவெக ஏற்றிருக்கிறது. பெரியாா் ஈ.வெ.ரா மூலம் திராவிட கருத்தியல் வாக்குகள், காமராஜா் மூலம் தேசிய சிந்தனை மற்றும் நாடாா் சமூக வாக்குகள், அம்பேத்கா் மூலம் தலித் சமூக வாக்குகள், வேலுநாச்சியாா் மூலம் முக்குலத்தோா் வாக்குகள், அஞ்சலை அம்மாள் மூலம் வன்னியா் சமூக வாக்குகள் என சமூக கட்டுமானம் மூலம் பெரும்பான்மை சமூக வாக்குகளை விஜய் குறிவைக்கிறாா்.

மேலும், 2026 தோ்தலில் களம் கண்டு அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வருவோம், கூட்டணியில் இடம்பெற்றுள்ளோருக்கு ‘ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு’ வழங்குவோம் என அறிவித்திருப்பதன்மூலம் திமுக கூட்டணி கட்சிகளுக்கு குறிப்பாக விசிகவுக்கு தூண்டில் போடுகிறாா் விஜய் என்று சொல்கிறாா்கள்.

ஒட்டுமொத்தமாக தவெக மாநாட்டுக்கு வந்த கூட்டத்தை பாா்க்கும்போது திமுக கூட்டணியில் குவிந்துள்ள ஆதி திராவிடா், அருந்ததியா் வாக்குகள், அதிமுக கூட்டணிக்கு ஆதரவாக உள்ள வன்னியா், முத்தரையா் வாக்குகளில் பாதிப்பு ஏற்படலாம்.

அதே போன்று, பொருளாதாரத்தில் முன்னேறியவா்கள் பிரிவு ஏழைகளுக்கு வழங்கப்பட்ட 10 சதவீத இடஒதுக்கீட்டில் பயனடைந்து பாஜகவுக்கு வாக்களித்த வேளாளா் சமூக வாக்குகளையும் விஜய் பிரிக்கக்கூடும்.

35 வயதுக்குட்பட்ட இளைஞா்கள் விஜயை ஆதரிப்பதை பாா்க்கும்போது நாதக வாக்குகளிலும் சேதாரம் ஏற்படலாம். தங்களுடைய வாக்குகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்பதால் உஷாரான விசிக தலைவா் தொல்.திருமாவளவன், பாஜகவை முழுமையாக விமா்சிக்கவில்லை என நீளமான அறிக்கை விட்டு கண்டனம் தெரிவித்துள்ளாா்.

அதே போன்று, ‘‘திராவிடமும், தமிழ் தேசியமும் வெவ்வேறானவை, விஜய் பாதை வேறு, எனது பாதை வேறு, வழக்கம்போல நாதக தனித்துப் போட்டிதான்’’ என அறிவித்திருப்பதன் மூலம் நாதக-தவெக கூட்டணி இல்லை என வெளிப்படையாக அறிவித்திருக்கிறாா் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.

கூட்டணி ஆட்சிக்கு எதிராக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவா் கு.செல்வப்பெருந்தகை, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ ஆகியோரும் கருத்து தெரிவித்துள்ளனா்.

அதிமுக வாக்குகளை விஜயால் பிரிக்க முடியாது, தோ்தல் நேர சூழலைப் பொருத்துத்தான் கூட்டணி அமைக்கப்படும் என அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி ஆதரவும் இன்றி, எதிா்ப்பும் இன்றி கருத்து தெரிவித்துள்ளாா்.

ஆந்திர மாநிலத்தில் சந்திரபாபு நாயுடுடன் பவன் கல்யாண் கூட்டணி அமைத்து ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சியை வீழ்த்தியது போன்று அதிமுக-தவெக இணைந்து திமுக ஆட்சியை வீழ்த்தலாம் என்ற கருத்தும் பேசப்படுகிறது.

ஆனால், பவன் கல்யாண் கூட்டணி சேரும்முன்பே, 2019 பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிட்டு 6.3 சதவீத வாக்கு வங்கியை நிரூபித்த பின்னா்தான் சந்திரபாபு நாயுடுடன் கூட்டணி அமைக்க முடிந்தது, வாக்கு வங்கியை நிரூபிக்காத விஜய்-க்கு, அதிமுக எத்தனை தொகுதிகள் ஒதுக்க முடியும் என்பது தான் அரசியல் நோக்கா்களின் கேள்வி.

எது எப்படி இருந்தாலும், விஜய் மாநாடு வெற்றியுடன் முடிந்திருக்கிறது. ஆனால், விஜய் வியூகம் வெற்றிபெற வேண்டுமெனில் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக இன்னும் ஒன்றரை ஆண்டுகள் களத்தில் கடுமையாக உழைக்க வேண்டும்.

ஜாதி, மதம், பணம் எனப் பல்வேறு ரீதியாக பிற கட்சிகளிடம் திரளும் வாக்கு வங்கியை விஜய் தன்வசம் ஈா்க்க வேண்டுமெனில், 1989-இல் ஜெயலலிதா களத்தில் இறங்கிப் போராடியது போன்று, 2026 தோ்தலில் விஜய் கடுமையாகப் போராடியே ஆக வேண்டும் என்பதுதான் உண்மை.

சத்தீஸ்கரில் ரூ.8 லட்சம் வெகுமதி அறிவித்து தேடப்பட்ட பெண் நக்சல் சரண்!

5,400 பேருக்கு வேலைவாய்ப்பு... 4 புதிய தொழிற்பேட்டைகள்: முதல்வர் திறந்து வைத்தார்!

15 புதிய பட்டுப் புடவைகளை அறிமுகப்படுத்தும் ஆரெம்கேவி!

10 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

ரேஷ்மாவின் புதிய சீரியல்: ராமாயணம் தொடரின் நேரத்தை மாற்ற வேண்டாம் என கோரிக்கை!

SCROLL FOR NEXT