முகப்பு
தமிழ்நாடு

கிராம வங்கிகளை மீண்டும் ஒருங்கிணைக்க நிதியமைச்சகம் நடவடிக்கை

மண்டல கிராம வங்கிகளை 4-ஆவது கட்டமாக ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது. இப்போது நாடு முழுவதும் 43 மண்டல கிராம வங்கிகள் உள்ள நிலையில் இவை 28 வங்கிகளாக ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றன.

Updated On : 5 நவம்பர், 2024 at 8:02 PM
பகிர்:

மண்டல கிராம வங்கிகளை 4-ஆவது கட்டமாக ஒருங்கிணைக்கும் நடவடிக்கையை மத்திய நிதியமைச்சகம் தொடங்கியுள்ளது. இப்போது நாடு முழுவதும் 43 மண்டல கிராம வங்கிகள் உள்ள நிலையில் இவை 28 வங்கிகளாக ஒருங்கிணைக்கப்பட இருக்கின்றன.

இதன் மூலம் வங்கிகளின் செயல்பாடுகள் சிறப்பாக இருப்பதுடன், செலவும் கணிசமாகக் குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இப்போதைய நிலையில் ஆந்திரத்தில் அதிகபட்சமாக 4 மண்டல கிராம வங்கிகள் உள்ளன. இதற்கு அடுத்து உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகியவற்றில் தலா 3, பிகாா், குஜராத், ஜம்மு-காஷ்மீா், கா்நாடகம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரம், ஒடிஸா, ராஜஸ்தானில் தலா இரு மண்டல கிராம வங்கிகள் உள்ளன.

தேசிய வேளாண்மை, கிராம வளா்ச்சி வங்கியுடன் (நபாா்டு) ஆலோசித்து இந்த மண்டல கிராம வங்கிகளை ஒருங்கிணைக்க நிதியமைச்சகம் திட்டம் வகுத்துள்ளது.

முன்னதாக, கடந்த 2004-05-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 196 மண்டல கிராம வங்கிகள் செயல்பட்டு வந்தன. 2020-21-ஆம் ஆண்டு வரை மூன்று கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு 196 வங்கிகள் 43 வங்கிகளாகக் குறைக்கப்பட்டன.

மண்டல கிராம வங்கிகள் சட்டம் 1976-இன் கீழ் இந்த வங்கிகள் உருவாக்கப்பட்டன. கிராமப்பகுதிகளில் சிறு விவசாயிகள், வேளாண் தொழிலாளா்கள், கைவினைக் கலைஞா்களுக்கு கடன் மற்றும் பிற வங்கிச் சேவைகளை அளிப்பதே இந்த வங்கியின் நோக்கமாகும்.

இந்த வங்கியின் நிதியில் 50 சதவீதம் மத்திய அரசுடையதாகும். 35 சதவீதம் பொதுத் துறை வங்கிகளின் நிதியாகவும், 15 சதவீதம் வங்கி செயல்படும் மாநில அரசின் நிதியாகவும் உள்ளது.

தமிழ்நாட்டில் பாண்டியன் கிராம வங்கி, பல்லவன் கிராம வங்கி என செயல்பட்டு வந்த மண்டல கிராம வங்கிகள், 2019-ஆம் ஆண்டு ஒருங்கிணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாக செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.