சென்னை: இன்று தமிழகத்தில் மழைக்கான ஹாட்ஸ்பாட்களாக இருப்பவை டெல்டா, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் என்று தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
மழை குறித்து தொடர்ந்து கண்காணித்து சமூக வலைதளத்தில் அறிவிப்புகளை வெளியிட்டுவரும் தமிழ்நாடு வெதர்மேன் என்று அழைக்கப்படும் பிரதீப் ஜான் இன்று மழை நிலவரம் குறித்து பதிவிட்டுள்ளார்.
தனது முகநூல் பக்கத்தில், தமிழகத்தில் இன்றைய மழை நிலவரம் மற்றம் வடகிழக்குப் பருவமழையின் நிலவரம் குறித்து தகவல்களை பகிர்ந்துள்ளார்.
அதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் நாள்தோறும் இரவு மழை பெய்வது தொடரும். நீங்கள் உறங்கிக் கொண்டிருக்கும்போது சப்தமில்லாமல் மழை பெய்யும். தெற்கு சென்னைக்கு மீண்டும் நல்ல மழை கிடைத்திருக்கிறது.
வங்கக் கடலில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேகக் கூட்டங்களாகக் கலைந்துசென்றிருப்பது தமிழகத்துக்குக் கிடைத்திருக்கும் நல்ல செய்தியாகும். இதனால், தமிழகம் முழுவதும் சில்லென்ற காலநிலை நிலவுகிறது.
இன்று முதல் நாளை வரை, டெல்டா, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மழைக்கான ஹாட்ஸ்பாட்டாக உள்ளன.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் இரவு முதல் காலை வரை தொடரும் மழையும், பகல் நேரத்தில் ஆங்காங்கே மழையும் பெய்யும். தமிழகத்தைப் பொருத்தவரை, தமிழக உள் மாவட்டங்களும், மேற்கு மாவட்டங்களும் நல்ல மழையைப் பெறலாம். ஆனால், அனைத்து மாவட்டங்களுக்கும் நல்ல மழை கிடைக்கும் என்று சொல்ல முடியாது.
சென்னையில் இவ்வளவு சீக்கிரம் தண்ணீர் பற்றாக்குறை பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டியதில்லை. இன்னமும் எம்ஜேஓ எனப்படும் பருவநிலை மாறுபாட்டுக்கான காலநிலை நமது பகுதியில்தான் நிலவுகிறது. எனவே, மிகச் சிறந்த பருவமழைக் காத்திருக்கிறது. இப்போதுதான் நவம்பர் மத்தியில் இருக்கிறோம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.