சென்னை மத்திய சிறையில் நடந்த கலவரத்தில் எரித்துக் கொலை செய்யப்பட்ட துணை சிறை அலுவலர் எஸ். ஜெயக்குமாரின் 25-ஆம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சென்னை மத்திய சிறைச்சாலையில் கடந்த 17.11.1999 -ல் கைதிகளுக்குள் கலவரம் மூண்டது. அப்போது அங்கு துணை சிறை அலுவலராகப் பணியில் இருந்த எஸ். ஜெயக்குமார், சிறையில் கலவரத்தை அடக்க முற்பட்டபோது, கைதிகளால் தாக்கப்பட்டு, உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டார். காவல்துறை நடத்திய துப்பாக்கி சூட்டில் 9 கைதிகளும் கொல்லப்பட்டனர். இச்சம்பவம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இதையடுத்து அவரது சொந்த ஊரான சிவகங்கையில் குடும்பத்தினரால் நினைவு சதுக்கம் நிறுவப்பட்டது. அங்கு, ஆண்டுதோறும் நினைவுநாளில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
துணை சிறை அலுவலர் எஸ். ஜெயக்குமார் இறந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், சிவகங்கையிலுள்ள அவரது நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் ஞாயிற்றுக்கிழமை அஞ்சலி செலுத்தினர்.
மேலும், சிவகங்கை கிளைச்சிறை கண்காணிப்பாளர் அ.பாலமுருகன், சிறை காவல் அதிகாரிகள் முத்து மனோ சுப்பிரமணியபாரதி, பெ. கண்ணபெருமாள், சக்திவேல், ராஜபாண்டி, சிவகங்கை நகர் துணைக் காவல் கண்காணிப்பாளர் அமலஅட்வின், சிவகங்கை நகர் காவல் ஆய்வாளர் அன்னராஜ், சிவகங்கை நகர்மன்றத்தலைவர் சி.எம். துரைஆனந்த், காவல் அதிகாரிகள் மற்றும் ஆயுதப்படை காவல் அதிகாரிகள் பங்கேற்று மறைந்த துணைசிறை அலுவலர் ஜெயக்குமாரின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவு கூர்ந்து, அஞ்சலி செலுத்தினர்.
இதையடுத்து, அவரது குடும்பத்தினர் சார்பில் சிவகங்கையில் உள்ள மாற்றுத்திறனாளிகளால் நடத்தப்படும் "தாய் இல்லத்தில்" உள்ள அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.