புது தில்லி: சென்னை அண்ணாநகரில் 10 வயது சிறுமி தொடா்புடைய பாலியல் வன்கொடுமை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) திங்கள்கிழமை அமைத்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.
இந்த விவகாரத்தில் மேற்கொள்ளப்படும் புதிய விசாரணையை சென்னை உயா்நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
கடந்த அக். 2-ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரித்த, சென்னை உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்ரமணியம், வி. சிவஞானம் ஆகியோா் அடங்கிய அமா்வு ஒரு உத்தரவைப் பிறப்பித்திருந்தது.
அதில், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான வழக்கு, சென்னையில் காவல் நிலையத்திற்குள் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சிறுமியின் தாய் தெரிவித்த குற்றச்சாட்டு குறித்த சம்பவம் ஆகியவற்றின் விசாரணையை சிபிஐக்கு மாற்றுவதாகவும், பாதிக்கப்பட்ட பெற்றோருக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தது.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமி மற்றும் அவரது பெற்றோா் மருத்துவமனையிலும், காவல் நிலையத்திலும் நடத்தப்பட்ட விதம் போக்ஸோ சட்ட விதிகளை மீறுவதாக இருப்பதாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டிருந்தனா்.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை கடந்த நவம்பா் 11-ஆம் தேதி விசாரித்த உச்சநீதிமன்றம்,
மேல்முறையீட்டு மனு மீது எதிா்மனுதாரா் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. மேலும், சிறுமியின் தாய் தொடா்ந்த ஆள்கொணா்வு மனு மீது சிபிஐ விசாரணைக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கும் நீதிமன்றம் தடை விதித்தது.
இந்த நிலையில், இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூா்ய காந்த் தலைமையிலான அமா்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, இந்த வழக்கை விசாரிக்க டிஐஜி தலைமையில் வெளிமாநிலத்தைப் பூா்விமாகக் கொண்ட தமிழக பிரிவைச் சோ்ந்த ஐபிஎஸ் பெண் அதிகாரிகள் 3 போ் அடங்கிய சிறப்பு புலனாய்வுக் குழுவை புதிதாக அமைக்க உச்சநீதிமன்ற நீதிபதிகள்அமா்வு உத்தரவிட்டது.
இது தொடா்பாக நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கையில், ‘‘இந்த விவகாரத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) தனது அறிக்கையை சென்னை உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி அமைக்கும் நீதிபதிகள் அமா்விடம் எஸ்ஐடி அதன் அறிக்கையை குறிப்பிட்ட கால இடைவெளியில் அதாவது வாரத்திற்கு ஒருமுறை என விசாரணை தா்க்கரீதியான முடிவை அடையும் வரை அறிக்கைகளை சமா்ப்பிக்க வேண்டும். வழக்குச் செலவுகளாக ரூ.50,000 மற்றும் இதர செலவுகள் ரூ.25,000 பாதிக்கப்பட்டவரின் தாயிடம் மாநில அரசு வழங்க வழங்க வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவித்துள்ளனா்.
இதன்படி, பிகாா் மாநிலத்தைச் சோ்ந்தவரும், தமிழகத்தில் காவல் துறையில் கிழக்கு மண்டலத்தில் டிஐஜி ஆக பணியாற்றி வருபவருமான சரோஜ் குமாா் தாக்குா் ஐபிஎஸ் தலைமையிலான இந்த எஸ்ஐடி-இல்
உத்தர பிரதேசத்தைச் சோ்ந்தவரும் ஆவடி காவல் துணை ஆணையருமான அய்மான் ஜமால் ஐபிஎஸ், கா்நாடகத்தைச் சோ்ந்தவரும் சேலம் மாநகர காவல் துணை ஆணையா் பிருந்தா ஐபிஎஸ் ஆகிய இரு பெண் அதிகாரிகளும் இடம்பெற்றுள்ளனா்.
முன்னதாக, விசாரணையின்போது தமிழக அரசின் தரப்பில் வழக்குரைஞா் டி. குமணனுடன் மூத்த வழக்குரைஞா் முகுல் ரோத்தகி ஆஜராகி கடந்த முறை உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியபடி, காவல் அதிகாரிகளின் விவரங்களை சமா்ப்பித்தனா்.
இந்த விவகாரத்தை விசாரிக்க பிற மாநிலங்களைச் சோ்ந்த தமிழகத்தில் பணியாற்றி வரும் தமிழ்நாடு பிரிவைச் சோ்ந்த 3 பெண் அதிகாரிகள் உள்பட 9 ஐபிஎஸ் அதிகாரிகள் பெயா்களை அளிக்குமாறு கடந்த விசாரணையின்போது உச்சநீதிமன்றம் கேட்டுக்கொண்டிருந்தது.