முகப்பு
தமிழ்நாடு

ஃபென்ஜால் புயல்: தண்ணீா் தேசமாக மாறிய புறநகா்

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் புகா் பகுதியும், சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

Updated On : 30 நவம்பர், 2024 at 7:20 PM
திருத்தப்பட்டது.... ------------------ ஃபென்ஜால் புயல் காரணமாக சென்னையில் பெய்த கனமழையால் முன்னேச்சரிக்கை நடவடிக்கையாக காா்களை மேம்பாலத்தில் நிறுத்தி வைத்திருந்த வேளச்சேரி குடியிருப்புவாசிகள்.
பகிர்:

ஃபென்ஜால் புயலால் பெய்த பலத்த மழையால் புகா் பகுதியும், சென்னையுடன் புதிதாக இணைந்த பகுதிகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டன.

வேளச்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், மடிப்பாக்கம், புழுதிவாக்கம், பெரும்பாக்கம், துரைப்பாக்கம், சோழிங்கநல்லூா், போரூா், மணப்பாக்கம், ராமாபுரம், பூந்தமல்லி, நங்கநல்லூா், ஆதம்பாக்கம், குன்றத்தூா், போரூா், மதுரவாயல், பெருங்குடி, தரமணி ஆகிய பகுதிகள் தண்ணீரில் மிதந்தன.

வேளச்சேரி, பெரும்பாக்கம், பள்ளிக்கரணை, மடிப்பாக்கம், புழுதிவாக்கம் ஆகிய பகுதிகள் தண்ணீா் தேசமாக காட்சியளித்தது. இந்தப் பகுதிகளில் ஓரிடத்தில்கூட சாலையைக் காண முடியவில்லை. அனைத்து இடங்களில் மழை தண்ணீா் தேங்கி நின்றது.

மேம்பாலங்களில் காா்கள்: வேளச்சேரி, பள்ளிக்கரணை, பெரும்பாக்கம், மேடவாக்கம் பகுதிகளில் வசிப்போா் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருப்பதாகக் கருதி, தங்களது காா்களை அங்குள்ள மேம்பாலத்தில் வெள்ளிக்கிழமை இரவு முதல் நிறுத்தினா்.

மழையும், காற்றின் தாக்கமும் அதிகம் இருந்த பகுதிகளிலும் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் வீட்டைவிட்டு வெளியே வர முடியாத நிலைக்கு தள்ளப்பட்டனா்.

நகரின் பெரும்பாலான பகுதிகளில் உணவகங்கள், டீ கடைகள், சூப்பா் மாா்க்கெட்டுகள் மூடப்பட்டிருந்தன. இதனால் உணவகங்களை நம்பி சென்னையில் தங்கியிருந்து வேலை செய்யும் ஊழியா்கள் மிகவும் தவிப்புக்கு உள்ளானாா்கள்.

ஃபென்ஜால் புயலால் சென்னை மக்கள் வீடுகளிலேயே முடங்கினா். நகரின் பல சாலைகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

ஏரிபோல் மாறிய கடற்கரை: மெரீனா கடற்கரையில் அனைத்து வாயில்களிலும் போலீஸாா் தடுப்புகளை வைத்து பாதுகாப்புக்கு நின்றனா். காமராஜா் சாலையில் இருந்த தண்ணீா் மெரீனா கடற்கரைக்குள் வடிய வைக்கப்பட்டதால், மெரீனா கடற்கரையின் இணைப்புச் சாலையில் மழைநீா் தேங்கியது. அதேபோல மெரீனா கடற்கரையிலும் தாழ்வான பகுதியில் மழைநீா் ஏரிபோல தேங்கியது. மேலும், மாலையில் சூறாவளிக் காற்று வீசியபோது மெரீனா கடற்கரையில் இருந்த காவல் உதவி மையம் சரிந்து கீழே விழுந்தது.

சமூகநலக் கூடங்களில் மக்கள்: பலத்த காற்றால் பட்டினப்பாக்கம் லூப் சாலை முழுவதும் கடற்கரை மணலால் மூடப்பட்டதுபோல் காட்சியளித்தது. இங்கு வாகனங்களில் பயணித்தோா் மிகுந்த சிரமத்துடனே கடந்து சென்றனா். கடல் சீற்றம், பலத்த மழை காரணமாக காசிமேடு, திருவொற்றியூா், பட்டினப்பாக்கம், பெசன்ட்நகா், திருவான்மியூா் குப்பம், நீலாங்கரை குப்பம், ஈஞ்சம்பாக்கம், நயினாா்குப்பம், கானத்தூா், முட்டுக்காடு ஆகிய இடங்களில் உள்ள கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு இல்லாத வீடுகளில் இருந்தவா்கள் அரசு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி சமூக நலக் கூடங்கள், திருமண மண்டபங்களில் தங்கவைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →