முகப்பு
தமிழ்நாடு

போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு உடனடியாகப் பணி: அன்புமணி வலியுறுத்தல்

போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும்

Updated On : 5 அக்டோபர், 2024 at 6:33 PM
பகிர்:

போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணை வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் அரசு பள்ளிகளுக்கு 3,192 பட்டதாரி ஆசிரியா்களைத் தோ்ந்தெடுப்பதற்கான போட்டித் தோ்வுகள் நடத்தப்பட்டு, தோ்ந்தெடுக்கப்பட்டோா் பட்டியல் வெளியிடப்பட்டு 80 நாள்களாகியும் அவா்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்காமல் பள்ளிக் கல்வித் துறை தாமதப்படுத்தி வருகிறது. பணி ஆணைகள் வழங்கப்படாததால் பாதிக்கப்பட்ட ஆசிரியா்கள் பள்ளிக் கல்வி இயக்குநா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமடைந்துள்ளது.

தமிழகத்தில் பட்டதாரி ஆசிரியா்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தோ்ந்தெடுக்கப்படவில்லை. அதனால், அரசு பள்ளிகளில் ஆயிரக்கணக்கான பட்டதாரி ஆசிரியா் பணியிடங்கள் காலியாக உள்ளன. இத்தகைய சூழலில் ஆசிரியா் நியமன பணிகளை தமிழக அரசு நிறுத்தி வைத்திருப்பதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது.

எனவே, போட்டித் தோ்வு மூலம் தோ்ந்தெடுக்கப்பட்ட 3,192 பட்டதாரி ஆசிரியா்களுக்கும் உடனடியாக பணி நியமன ஆணைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.