முகப்பு
தமிழ்நாடு

சாம்சங் தொழிலாளர்களுடன் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு!

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், சாம்சங் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:42 AM
சாம்சங் தொழிலாளர்களுடன் திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் சந்திப்பு
பகிர்:

காங்கிரஸ், விசிக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள், சாம்சங் தொழிலாளர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள்,  ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு வாரங்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

போராட்டத்தில் ஈடுபட்ட சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களை காவல்துறையினரை இன்று காலை கைது செய்தனர். முன்னதாக அவர்களின் போராட்டப் பந்தலை நேற்று இரவு அகற்றியதுடன் தொழிலாளர்கள் சிலரை காவல்துறை வீடு புகுந்து கைது செய்துள்ளது.

காவல்துறையினரின் இந்த கைதுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் இன்று காலையே சாம்சங் நிறுவனத் தொழிலாளர்களை சந்திக்கவிருந்த நிலையில், அவர்கள் கைது செய்யப்பட்டதால் இன்று பிற்பகல் சந்தித்தனர்.

விசிக தலைவர் தொல். திருமாவளவன், காங்கிரஸ் சார்பில் தங்கபாலு, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் ஆகியோர் கைதானவர்களை நேரில் சந்தித்து தங்கள் ஆதரவை தெரிவித்தனர்.

திமுக கூட்டணி கட்சித் தலைவர்களே சாம்சங் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

முன்னதாக இது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம், சாம்சங் தொழிலாளர்கள் அமைதியான முறையில் போராட்டம் நடத்தத் தடையில்லை என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

சாம்சங் போராட்டம்

காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவாா் சத்திரத்தில் உள்ள சாம்சங் நிறுவனத் தொழிலாளா்கள்,  ஊதிய உயர்வு, தொழிற்சங்க அனுமதி உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

அவா்களுடன் பேச்சுவாா்த்தை நடத்த அமைச்சா்கள் டி.ஆா்.பி.ராஜா, தா.மோ.அன்பரசன், சி.வி.கணேசன் ஆகியோா் அடங்கிய குழுவை முதல்வா் மு.க.ஸ்டாலின் அமைத்தாா். இந்தக் குழுவினா் சாம்சங் நிறுவனத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில், தொழிற்சங்கம் அமைப்பதைத் தவிர, மற்ற அனைத்து கோரிக்கைகளும் நிறுவனத்தால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

ஆனால், தொழிற்சங்கத்தை அங்கீகரிக்கும் வரை போராட்டம் தொடரும் என்று சாம்சங் இந்தியா சிஐடியு தொழிற்சங்கம் அறிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது.

போராட்டப் பந்தல் அகற்றம்

செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் சிஐடியு தொழிற்சங்க நிர்வாகிகளின் வீடுகளுக்குச் சென்ற காவல்துறையினர் அவர்களை கைது செய்துள்ளனர்.

மேலும், சாம்சங் தொழிற்சாலை அருகே தனியாரின் நிலத்தின் உரிமையாளருடன் அனுமதியுடன் அமைக்கப்பட்டிருந்த போராட்டப் பந்தலையும் இரவோடு இரவாக காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.

தொழிலாளர்கள் கைது

இந்த நிலையில், இன்று காலை போராட்டக் களத்தில் கூடிய சாம்சங் தொழிலாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.

அங்கு குவிக்கப்பட்டிருந்த காவலர்கள், போராட்டத்தை கைவிடுமாறு வைத்த கோரிக்கையை தொழிலாளர்கள் ஏற்க மறுத்ததை அடுத்து கைது செய்யப்பட்டனர்.

மேலும், போராட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க வந்திருந்த சிஐடியு மாநிலத் தலைவர் செளந்தரராஜனும் கைது செய்யப்பட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →