முகப்பு
தமிழ்நாடு

நல்லகண்ணு மறைவு : தலைவர்கள் இரங்கல்

மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல்...

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 3:33 PM
நல்லகண்ணு - கோப்புப் படம்
பகிர்:
Updated On : 25 பிப்ரவரி, 2026 at 3:31 PM

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ரத்த அழுத்தம், சிறுநீரக கோளாறு காரணமாக பிப்ரவரி 1 ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு, பல்துறை மருத்துவக் குழுவினா் தொடா் சிகிச்சை அளித்து வந்தனர்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 3:33 PM

வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் வழங்கப்பட்டு வந்தது. கடந்த இரு நாள்களாக அவரின் உடல்நிலை பின்னடைவை சந்தித்த நிலையில், இன்று (பிப். 25) உயிர் பிரிந்தது.

Advertisement

நல்லகண்ணுவின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் மு.க. ஸ்டாலின்

நல்லகண்ணு மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் பதிவிட்டுள்ளதாவது:

நம் சமகாலத்தில் வாழ்ந்த சமரசமற்ற போராளி; நாட்டின் விடுதலைக்காக, பாட்டாளி வர்க்கத்தின் நலனுக்காக தம் இனிய வாழ்வின் பெரும்பகுதியை ஈகம் செய்த தியாகப் பெருஞ்சீலர்!

பொதுவுடைமைக் கருத்தியலும், திராவிட இயக்கக் கருத்தியலும் சமூக மாற்றத்துக்கான இரட்டைக்குழல் துப்பாக்கியாகச் செயல்பட வேண்டிய கோட்பாட்டுத் தோழமைகள் என்பதில் எப்போதுமே உறுதியாக இருந்தவர்.

அய்யாவை அவரது ஒவ்வொரு பிறந்தநாளிலும் சந்தித்து வாழ்த்து பெறுவதை நான் வழக்கமாக வைத்திருந்தேன். தோழரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும், ஆறுதலும்!

மறக்க முடியாத அந்த மாமனிதரின் வாழ்வே நமக்காக அவர் விட்டுச் சென்றிருக்கும் மகத்தான செய்தி. அதுவே நமக்கு வழிகாட்டும் ஒளியாகட்டும் எனப் பதிவிட்டுள்ளார்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 3:49 PM

தமிழிசை செளந்தரராஜன்

சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவர் ஆர். நல்லகண்ணு மறைவுச் செய்தி மிகுந்த துயரத்தை அளிக்கிறது. வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக போராடிய அவரது சேவை என்றும் நினைவுகூரப்படும். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். குடும்பத்தினர் மற்றும் தோழமைகளுக்கு ஆழ்ந்த இரங்கல்கள் எனப் பதிவிட்டுள்ளார்.

சீமான்

எவராலும் குறை சொல்லமுடியாத மனித புனிதர் நல்லகண்ணு என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய அவர், நல்லகண்ணுவின் மறைவு மிகுந்த மனவலியாக இருக்கிறது என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

விஜய்

சுதந்திரப் போராட்ட வீரர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், விவசாயிகளுக்காகவும் மக்களின் உரிமைகளுக்காகவும் தம் வாழ்நாளின் பெரும் பகுதியைச் செலவிட்ட போராளி, தோழர் இரா.நல்லகண்ணு காலமான செய்தியறிந்து மன வேதனை அடைந்தேன்.

அவரது இழப்பு, இந்த நாட்டிற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத் தோழர்களுக்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். அவரைப் பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மறைந்த தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.

செல்வப்பெருந்தகை

தகைசால் தமிழர் இரா. நல்லக்கண்ணு மறைந்த செய்தி மிகுந்த துயரத்தையும், வேதனையையும் அளிக்கிறது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தனது 101 வயது வரை பொதுவாழ்வில் எளிமையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து நாட்டு மக்களுக்கு முன்னுதாரணமாக வாழ்ந்து காட்டியவர். தான் கொண்ட கொள்கையிலும், நடைமுறை வாழ்விலும் தன் இறுதி மூச்சு வரை சமரசம் இன்றி வாழ்ந்தவர். தமிழகத்தில் மட்டுமல்லாது, அகில இந்திய அளவில் மிக மூத்த பொதுவுடைமைத் தலைவர்.

தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் சமூக இயக்கங்களுக்கு அவரது மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். தோழர் இரா. நல்லகண்ணு அவர்களின் நினைவு எப்போதும் சமூகநீதிக்கான போராட்டங்களில் வழிகாட்டியாக இருக்கும்.

Updated On : 25 பிப்ரவரி, 2026 at 4:10 PM

கமல்ஹாசன்

தனக்கென்று ஒரு வாழ்க்கை என்ற சிந்தையே இல்லாதவர்; பொதுநலத்துக்கென்றே சகலத்தையும் அர்ப்பணித்து வாழ்ந்தவர்; இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர், தோழர் நல்லகண்ணு ஐயா நம்மிடமிருந்து விடைபெற்றுக்கொண்டார்.

ஏழை எளிய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் ஆகியோரின் நலன்களுக்காக 80 ஆண்டு காலம் அயர்வே இல்லாமல் களத்தில் நின்றவர். நேர்மைக்கும் தூய்மைக்கும் எளிமைக்கும் அரசியல் நாகரீகத்துக்கும் ஒரு கலங்கரை விளக்கமாகத் திகழ்ந்தவர்.

தகைசால் தமிழரே, செவ்வணக்கம். உமது புகழ் நிலைக்கட்டும். உமது பணிகள் எம்மில் தொடரட்டும்.

அன்புமணி

அடித்தட்டு மக்களின் நலனுக்காக தமது வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட அவர், தமக்காக எதையும் சேர்த்துக் கொள்ளாதவர். இந்திய விடுதலைப் போராட்டத்திலும், விடுதலைக்குப் பிறகு பொதுவுடைமை இயக்கத்திலும் ஈடுபட்டதற்காக பல ஆண்டுகளை சிறையில் கழித்தவர்.

தியாகத்திற்கு உதாரணமாகத் திகழ்ந்த அவர், அனைத்துக் கட்சியினராலும் மதிக்கப்படுபவராக திகழ்ந்தார்.

தோழர் நல்லக்கண்ணு அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர், தோழர்கள், பொதுவுடைமை இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணாமலை

சிறந்த சமூக சீர்திருத்தவாதியாகவும், மிகவும் எளிமையான தலைவராகவும் விளங்கியவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டு, அனைத்துத் தரப்பு மக்களிடமும் நன்மதிப்பைப் பெற்றவர்.

ஐயா திரு. நல்லகண்ணு அவர்கள் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.