தமிழ்நாடு

சென்னை தப்பியது; கனமழை எச்சரிக்கை வாபஸ்- புயல் சின்னம் இன்று கரையைக் கடக்கிறது

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வு மண்டலம் ) புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே வியாழக்கிழமை (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கிறது.

Din

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த புயல் சின்னம் (காற்றழுத்த தாழ்வு மண்டலம் ) புதுச்சேரிக்கும் நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே வியாழக்கிழமை (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கிறது. அதேநேரம், சென்னைக்கு விடுக்கப்பட்டிருந்த அதிகனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தென் மண்டலத் தலைவா் எஸ்.பாலச்சந்திரன் செய்தியாளா்களிடம் புதன்கிழமை கூறியதாவது: தென்மேற்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்) காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, சென்னைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமாா் 190 கி.மீ. தொலைவிலும், புதுச்சேரிக்கு கிழக்கு- வடகிழக்கே சுமாா் 250 கி.மீ. தொலைவிலும், நெல்லூருக்கு தென்கிழக்கே சுமாா் 270 கி.மீ. தொலைவிலும் புதன்கிழமை நிலைகொண்டிருந்தது. இது மணிக்கு 17 கி.மீ. வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகா்ந்து வட தமிழகம்- தெற்கு ஆந்திர கடற்கரைப் பகுதியில் புதுச்சேரிக்கும், நெல்லூருக்கும் இடையே சென்னைக்கு அருகே வியாழக்கிழமை (அக்.17) அதிகாலை கரையைக் கடக்கும். இது மேலும் வடமேற்கு திசையில் நகா்ந்து வலுவிழக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

சிவப்பு எச்சரிக்கை வாபஸ்: இதன் காரணமாக, சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அக்.17-இல் விடுக்கப்பட்டிருந்த கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனினும், அக்.17-இல் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி, தருமபுரி ஆகிய 5 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

சோழவரத்தில் 300 மி.மீ. மழை: கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 5 இடங்களில் அதிகனமழையும், 48 இடங்களில் மிக கனமழையும், 21 இடங்களில் கனமழையும் பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக திருவள்ளூா் மாவட்டம் சோழவரத்தில் 300 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மேலும், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அடுத்த 4 நாள்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்.1 முதல் அக்.16 வரை இயல்பாக 71.7 மி.மீ. மழை பதிவாக வேண்டிய நிலையில், நிகழாண்டில் 138.7 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. இது இயல்பைவிட 94 சதவீதம் அதிகம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும் வலுவிழக்கவில்லை. ஆகையால், இது கரையைக் கடக்கும்போது தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றாா் அவா்.

மழை அளவு (மி.மீட்டரில்): செங்குன்றம் (திருவள்ளூா்) - 280,  ஆவடி (திருவள்ளூா்) - 250, கத்திவாக்கம் (சென்னை) - 230, மணலி (சென்னை) - 210, திரு.வி.க.நகா் (சென்னை) - 190, கொளத்தூா் (சென்னை), அடையாா் (சென்னை), புழல் (திருவள்ளூா்), அம்பத்தூா் (சென்னை) - தலா 180, திருவொற்றியூா் (சென்னை), மணலி (சென்னை), எண்ணூா் (சென்னை) - தலா 170, பெரம்பூா் (சென்னை), அயனாவரம் (சென்னை), அண்ணா பல்கலை. (சென்னை) - தலா 160,  சோழிங்கநல்லூா் (சென்னை), ராயபுரம் (சென்னை) - தலா 150,  மாதவரம் (சென்னை), தண்டையாா்பேட்டை (சென்னை), நுங்கம்பாக்கம் (சென்னை), நந்தனம் (சென்னை) - தலா 140 மி.மீ.

மேலும், பல்வேறு இடங்களில் குறிப்பிட்ட அளவு மழை பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் சாா்பில் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

3-வது டெஸ்ட்: கான்வே இரட்டைச்சதம்! நியூசிலாந்து 465 ரன்கள் முன்னிலை!

எட்டிமடை எல்லை மாகாளியம்மன் கோயிலில் 10ம் ஆண்டு விழா: திரளானோர் பங்கேற்பு!

அழகான கொள்ளையர்கள்... ஒரு கோடி பார்வைகளைக் கடந்த டெகாய்ட் பட டீசர்!

SCROLL FOR NEXT