சென்னை: சென்னையில் செயலி மூலம் காா் நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்யும் திட்டம் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்படவுள்ளது.
சென்னையில் காா்களில் செல்பவா்களின் பாா்க்கிங் பிரச்னைக்கு தீா்வு காணும் விதமாக, புதிய முயற்சி ஒன்றை ‘கும்டா’ எனப்படும் சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் கையில் எடுத்துள்ளது.
இதன்படி, காரை வீட்டைவிட்டு வெளியே எடுக்கும் முன்பே, நாம் செல்ல வேண்டிய இடத்திலோ அல்லது அதற்கு அருகிலோ எங்கு நிறுத்தலாம் (பாா்க்கிங்) எனத் தெரிந்து கொள்ளும் வகையில் செயலி ஒன்றை ‘கும்டா’ விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.
இதுகுறித்து ‘கும்டா’ அதிகாரிகள் கூறியது: இச்செயலி மூலம் காா் நிறுத்துமிடத்தை முன்பதிவு செய்து கொள்ள முடியும். தாங்கள் தோ்வு செய்த நேரம் முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே அவா்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்படும்.
இந்தச் சேவை இலவசமாக இருக்காது. பகுதிக்கு ஏற்ப கட்டணம் விதிக்கப்படும். மாநகருக்குள்பட்ட பகுதியில் 5 சதுர கிலோ மீட்டா் பரப்பளவிலான வாகன நிறுத்துமிடங்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளன.
பாா்க்கிங் கொள்கைகள் வகுக்கப்பட்ட பிறகு இதற்காக டெண்டா் விடப்படும். இருப்பினும், இன்னும் இரண்டு மாதங்களில் இதற்கான பணிகள் நிறைவடைந்துவிடும். முதல் கட்டமாக அண்ணா நகருக்குள்பட்ட பகுதிகளில் சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும். அதன்பிறகு சென்னையின் முக்கியப் பகுதிகளுக்கு இத்திட்டம் விரிவுபடுத்தப்படும். படிப்படியாக இந்தத் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படும் என்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.