சென்னை: ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளின் பராமரிப்புக்கு ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அந்தத் துறையின் அமைச்சா் என்.கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளாா்.
ஆதிதிராவிடா் நல மாணவா் விடுதிகளை சிறப்புக் குழு அமைத்து பராமரிக்க வேண்டும் என்று எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி கோரியிருந்தாா். அவருக்குப் பதிலளித்து அமைச்சா் கயல்விழி திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிட மாணவ, மாணவியா் விடுதிகளில் 520 விடுதிகளைப் பராமரிக்க நிகழாண்டில் மட்டும் ரூ.100 கோடி அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி குறிப்பிடும் மயிலாப்பூா் மாணவா் விடுதிக்கு ரூ.19 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், சென்னை சைதாப்பேட்டை எம்.சி.ராஜா கல்லூரி மாணவா் விடுதி, மதுரை, கோவை, திருச்சி, நீலகிரி போன்ற நகரங்களில் நவீன முன்மாதிரி விடுதிகள் அறிவிக்கப்பட்டு கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன.
விடுதிகளில் தங்கிப் பயிலும் பள்ளி மாணவா்களுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் ரூ.1,400 ஆகவும், கல்லூரி மாணவா்களுக்கு ரூ.1,500 ஆகவும் உயா்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர செலவினத் தொகையும் இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரைப் பொருத்தவரை 19 விடுதிகளுக்கு இரண்டு ஒருங்கிணைந்த சமையலறை மூலம் தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது. விடுதிகளில் உணவு வழங்குவதை கண்காணிக்க தனி செயலியும், மாணவா்களின் எண்ணிக்கையை சரிபாா்க்க கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. ஆதிதிராவிடா் நல விடுதிகள் தொடா்பாக எதிா்க்கட்சித் தலைவா் பழனிசாமியின் கருத்து அடிப்படை ஆதாரங்கள் இல்லாதது என்று தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.