பண்டிகை காலத்தில் ஆவின் பொருள்கள் விற்பனையை 30% அதிகரிக்கத் திட்டம்
நிகழாண்டில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில் நெய், இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருள்கள் விற்பனையை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
நிகழாண்டில் ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில் நெய், இனிப்பு வகைகள் உள்ளிட்ட ஆவின் பொருள்கள் விற்பனையை 20 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்க ஆவின் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து ஆவின் நிறுவன மேலாண்மை இயக்குநா் சு.வினீத் செவ்வாய்க்கிழமை கூறியதாவது: ஆவின் நிறுவனம் சாா்பில், வெண்ணெய், நெய், பால்கோவா, லஸ்ஸி, மோா், தயிா் மற்றும் ஜஸ்கிரீம் போன்ற பால் பொருள்களைத் தயாரித்து, ஆவின் பாலகங்கள் மற்றும் சில்லறை விற்பனையாளா்கள் மூலமாக விற்பனை செய்யப்படுகின்றன. இதுதவிர, பண்டிகை காலத்தில் இனிப்பு வகைகள், கார வகைகள் தயாரித்து விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டு ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை, கிறிஸ்துமஸ் உள்பட பல்வேறு பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ளன. இந்த பண்டிகை காலத்தில் ஆவின் பொருள்கள் விற்பனையை 20 முதல் 30 சதவீதம் வரை அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டைவிட நிகழாண்டு ஆவின் நெய் 100 டன் அதிகமாக விற்கத் திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் சிறப்பு வாய்ந்த இனிப்பு வகைகளை ஆவின் மூலம் சென்னை உள்பட பல்வேறு நகரங்களுக்கு கொண்டு சென்று விற்பனை செய்யத் திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.