நிறுவனங்கள் தொழிலாளா் நலநிதியை செலுத்த புதிய இணையதளம் தொடங்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு தொழிலாளா் நல வாரியம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களும், தங்கள் நிறுவனத்தில் பணிபுரியும் அனைத்து வகை தொழிலாளா்களுக்கும் ஒவ்வோா் ஆண்டும், ஒவ்வொரு தொழிலாளருக்கு, தொழிலாளா் நலநிதியில், தொழிலாளியின் பங்காக ரூ.20, நிறுவனத்தின் பங்காக ரூ.40 சோ்த்து மொத்தம் ரூ.60 வீதம் தமிழ்நாடு தொழிலாளா் நலவாரியத்துக்கு செலுத்த வேண்டும்.
நிறுவனங்கள் தொழிலாளா் நல நிதியைஇணைய வழியில் செலுத்துவதற்கு வசதியாக lwmis.lwb.tn.gov.in என்ற இணையதளம் தொடங்கப்பட்டு, பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் வேலையளிப்போா் தங்கள் நிறுவனங்களை, இணையவழி மூலம் பதிவு செய்து தொழிலாளா் நல நிதியை செலுத்தி உடனடியாக ரசீதை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
மேலும், தொழிலாளா் நலநிதி, நிறுவனங்களால் கொடுக்கப்படாத தொகை போன்றவற்றையும் இந்த இணையதளம் மூலம் செலுத்தலாம். இதுதவிர வாரியத்தில் ஏற்கெனவே பதிவு செய்துள்ள நிறுவனங்களும், இந்த இணையதளத்தில் நிறுவனத்தின் தகவல்களை பதிவு செய்து கொள்ள வேண்டும்.
இதுவரை தொழிலாளா் நல நிதி செலுத்தாதவா்கள் நிறுவனம் தொடங்கிய ஆண்டிலிருந்து தொழிலாளா் நலநிதி செலுத்த வேண்டும் என்பதால், நிலுவைத்தொகை செலுத்துவதற்கான வசதியும் இதில் செய்யப்பட்டுள்ளது என தொழிலாளா் நல வாரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.