மத்திய நிதியமைச்சரிடம் அன்னபூர்ணா நிறுவனர் மன்னிப்பு கேட்டதில் தவறு ஒன்றும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க நாள் விழாவையொட்டி தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கொடியேற்றி, கேப்டன் இல்லம் என்கின்ற பெயர் பலகை திறந்து வைத்தார்.
மேலும் இலவச மருத்துவ முகாமையும் டிஜிட்டல் வாயிலாக கட்சியில் உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகளையும் தொடக்கிவைத்தார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய பிரேமலதா விஜயகாந்த்,
'தேசிய முற்போக்கு திராவிட கழகத்தினுடைய 20 ஆம் ஆண்டு தொடக்க விழா இன்றைக்கு தமிழ்நாடு முழுவதும் கழகத்தின் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் கொடியேற்றுதல் மற்றும் நலத்திட்ட உதவிகளை வழங்கி முப்பெரும் விழாவாக கொண்டாடப்படுகிறது.
முப்பெரும் விழா என்னவென்றால் விஜயகாந்துக்கு பத்மபூஷண விருது கொடுத்தது, விஜயகாந்தின் 72 ஆவது பிறந்தநாள்,தேமுதிகவின் 20 ஆம் ஆண்டு துவக்க விழா, இந்த மூன்றையும் முப்பெரும் விழாவாக தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் கொண்டாட இருக்கிறோம்.
கேப்டன் இல்லாத கட்சியின் துவக்க நாள் இது' என்றார்.
தொடர்ந்து அன்னபூர்ணா விவகாரம் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர்,
'ஜிஎஸ்டி என்பது அனைத்து தொழில்களும் அதாவது சிறு தொழிலாக இருந்தாலும் பெரிய தொழிலாக இருந்தாலும் ஜிஎஸ்டி கேள்விக்குறியாகவே உள்ளது என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. ஜிஎஸ்டி வந்த பிறகு அனைவருடைய வாழ்க்கையும் பாதிப்புக்குள்ளாகி இருக்கிறது.
எனவே, ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் அன்னபூர்ணா உரிமையாளர் தன்னுடைய கருத்தை எடுத்துக் கூறினார். அவர் யதார்த்தமாக தான் பேசினார். அதில் எந்த உள்நோக்கம் இருப்பதாகவோ அல்லது அவர்களை அவமதிக்கும் நோக்கில் பேசியதாகவோ எனக்கு தெரியவில்லை. அதேபோல நிதித்துறை அமைச்சரும் அந்த நேரத்தில் அதனை சாதாரணமாக ஏற்றுக்கொண்டார்.
ஆனால் ஊடகங்கள் இதனை பெரிதாக்கியதால் அவரே தானாக முன்வந்து நிதி அமைச்சரே சந்திக்க வேண்டும் என அனுமதி பெற்று சந்தித்ததாக நான் கேள்விப்பட்டேன். அவர் சந்தித்து மன்னிப்பு கேட்டிருக்கிறார்.
நாம் தவறாக ஒரு வார்த்தை பேசும்போது மன்னிப்பு கேட்பது சகஜம்தான். அவரும் அதைத்தான் செய்திருக்கிறார். இதனை திமுகவும் காங்கிரஸும் மற்ற கட்சிகளும் ஏன் பூதாகரமாக கொண்டு செல்கிறார்கள் என்று தெரியவில்லை. இதை பெரிய விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்.
அதுபோல மகாவிஷ்ணு விவகாரமும் பூதாகரமானது. அதுவும் ஒன்றுமே இல்லை. அவர் பள்ளியில் சென்று பேசுவதற்கு யார் அனுமதி கொடுத்தார்கள் என்ற கேள்விக்கு இன்று வரை பதில் இல்லை.
மேலும் மகாவிஷ்ணு குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் மிரட்டலாக பேசியதற்கு யாரும் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அதுவும் அவமரியாதைதான்' என்று பேசியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.