மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ்(கோப்புப்படம்) படம்: ஏஎன்ஐ
தமிழ்நாடு

‘சந்திரயான்-4’ திட்டம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

நிலவை ஆய்வு செய்யும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்டத்தின் தொடா்ச்சியாக ‘சந்திரயான்-4’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

Din

நிலவை ஆய்வு செய்யும் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) திட்டத்தின் தொடா்ச்சியாக ‘சந்திரயான்-4’ திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது.

முந்தைய ‘சந்திரயான்-3’ திட்டத்தில் ‘லேண்டா்’ மற்றும் ‘ரோவா்’ கட்டமைப்புகளைக் கொண்டு நிலவின் மேற்பரப்பில் பாதுகாப்பாகவும் மென்மையாகவும் தரையிறங்குதல், நிலவின் மேற்பரப்பில் ரோவா் நகா்ந்து சென்று, ஆய்வை மேற்கொள்ளுதல் உள்ளிட்ட சாதனைகளை இஸ்ரோ புரிந்தது.

சந்திரயான்-4 திட்டத்தில் நிலவுக்கு மனிதா்களை அனுப்பி, பாதுகாப்பாக பூமிக்கு அழைத்து வருவதற்கான அடிப்படை தொழில்நுட்பத்தை நிரூபிப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இதற்கு மிகப் பெரிய தொழில்நுட்பங்கள் தேவைப்படும் எனவும், சந்திரயான்-4 திட்டத்தைச் செயல்படுத்த ரூ. 2,104.06 கோடி தேவைப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்கலத்தை இஸ்ரோ உருவாக்க உள்ளது.

இத் திட்டத்துக்கு, மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதன் மூலம், தொழில்நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டு முயற்சியுடன் அடுத்த 36 மாதங்களில் இத் திட்டம் நிறைவு செய்யப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

வெள்ளி கிரக திட்டத்துக்கு ஒப்புதல்: வெள்ளி கிரகத்தின் சுற்றுப்பாதைக்கு செயற்கைக்கோளை அனுப்பி ஆய்வு செய்யும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்துக்கு ரூ.1,236 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் ரூ. 824 கோடியில் விண்கலனை இஸ்ரோ மேம்படுத்த உள்ளது.

அடுத்த தலைமுறை ராக்கெட்: பகுதியாக மறுபயன்பாடு செய்யக்கூடிய வகையிலான அடுத்த தலைமுறை ராக்கெட் (என்ஜிஎல்வி) உருவாக்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரோவின் மிகப் பெரிய ‘மாக் 3’ ராக்கெட்டைக் காட்டிலும் 3 மடங்கு எடையிலான செயற்கைக்கோள்களை தாங்கிச் செல்லும் திறனுடன் ‘என்ஜிஎல்வி’ ராக்கெட்டுகள் மேம்படுத்தப்பட உள்ளன. இத் திட்டத்துக்காக ரூ. 8,240 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ராக்கெட்டை பகுதியாக மறு பயன்பாடும் செய்ய முடியும். இத் திட்டத்தை 8 ஆண்டுகளில் நிறைவு செய்ய மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது.

ஐஐடி-க்களில் அனிமேஷன் தொழில்நுட்ப மையங்கள்: ஐஐடி மற்றும் ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் அனிமேஷன், விஷுவல் எஃபெக்ட்ஸ், கேமிங், காமிக்ஸ் மற்றும் எக்ஸ்டெண்டட் ரியாலிட்டி தொழில்நுட்பங்களுக்கான தேசிய ஆற்றல்சாா் மையங்களை அமைப்பதற்கான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதுகுறித்து மத்திய செய்தி ஒலிபரப்புத் துறை அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், ‘இந்தியாவில் இந்தத் துறைகளை விரிவுபடுத்தும் வகையில், வெளிநாட்டு முதலீடுகளை ஈா்த்து தலைசிறந்த பொழுதுபோக்கு மற்றும் கல்வி சாா்ந்த படைப்புகள் உருவாக்கப்படுவதை ஊக்குவிக்குவிப்பதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கம்’ என்றாா்.

உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி: புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் தொழில்முனைவை மேம்படுத்துவதற்கான உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி (பயோ-ரைட்) திட்டத்துக்கு மத்திய அைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, தொழில் நிறுவனங்கள் மற்றும் தொழில்முனைதல் மேம்பாடு ஆகிய இரு திட்டங்களை ஒருங்கிணைத்து ‘பயோ-ரைட்’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்தத் திட்டத்தை 15-ஆவது நிதிக் குழு கால கட்டத்தில் (2021-22 முதல் 2025-26 வரை) செயல்படுத்த ரூ. 9,197 கோடி ஒதுக்கீடு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

ரூ. 24,275 கோடி உர மானியத்துக்கு ஒப்புதல்

2024-25-ஆம் ஆண்டின் ராபி பருவத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில் பாஸ்பேட் மற்றும் பொட்டாசியம் (பி அண்ட் கே) உரங்கள் கிடைப்பதை உறுதிப்படுத்தும் வகையில் ரூ. 24,474.53 கோடி மானியம் ஒதுக்க மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இந்த மானியம் உர தயாரிப்பு நிறுவனங்களுக்கு வழங்கப்படும். இதன் மூலம், விவசாயிகளுக்கு 28 ரகங்களில் ‘பி அண்ட் கே’ உரங்கள் மானிய விலையில் கிடைப்பதை மத்திய அரசு உறுதிப்படுத்தி வருகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பி.எம். - ஆஷா’ திட்டம் நீட்டிப்பு... அத்தியாவசிய உணவுப் பொருள்களின் விலை ஏற்ற-இறக்கத்தைக் கட்டுப்படுத்தி, விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைப்பதை உறுதிப்படுத்த நடைமுறையில் உள்ள ‘பி.எம். - ஆஷா’ திட்டத்தைத் தொடர மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்தது. இதற்கென, வரும் 2025-26-ஆம் ஆண்டு வரையிலான காலத்துக்கு ரூ. 35,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.

பழங்குடியினா் மேம்பாடு: நாடு முழுவதும் உள்ள பழங்குடியின மக்களின் சமூக-பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்கு ரூ. 79,156 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் பிரதமரின் பழங்குடியின கிராம மேம்பாடு திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் 549 மாவட்டங்களில் உள்ள 2,740 வட்டங்களில் அமைந்துள்ள பழங்குடியின கிராமங்கள் மேம்படுத்தப்பட உள்ளன.

அதிமுக புதுவை செயலா் அன்பழகனுக்கு சென்னையில் இதய அறுவை சிகிச்சை

ஜாடை காட்டியே... மேகா ஷுக்லா!

களைகட்டிய விநாயகர் சிலைகள் விற்பனை - புகைப்படங்கள்

சமூக ஊடகப் பதிவுகளுக்கு விரைவில் கட்டுப்பாடு! - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்

ஜம்மு - காஷ்மீரில் கனமழை - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT